மவ்லூது ஓதுவதற்கு கூட்டம் குறைந்து விட்டது!!
1980 களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சத்தியப் பிரச்சாரம் தற்போது முழு அளவில் வீரியமடைந்து சீரும் சிறப்புமாக தமிழகத்தில் மாபெரும் எழுச்சி கண்டு வருகின்றது. தவ்ஹீத் ஜமா-அத்தின் வீரியமிக்க பிரச்சாரத்தின் மூலம் தமிழக முஸ்லிம்கள் தங்களைப் பீடித்திருந்த ஷிர்க் மற்றும் பித்அத் போன்ற கொடிய நோய்களிலிருந்து விலகி நரகப் படுகுழியிலிருந்து பாதுகாப்பு பெற்று வருகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்…
அதற்கு ஆதாரமாக பல பள்ளிவாசல்களைக் குறிப்பிடலாம் என்ற போதிலும் உதாரணத்திற்கு, வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் முத்தமிழ்நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில் சென்ற வரம் நடந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
வடசென்னை, கொடுங்கையூர் முத்தமிழ்நகர் அல் அமீன் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு அறிவிப்பு செய்துள்ளது. முன்பு போல் மவ்லூது ஓதுவதற்கு ஆட்கள் வருவதில்லை.
மவ்லூது ஓதும் பள்ளிவாசல் இமாமோடு சேர்ந்து சின்னஞ்சிறிய சிறுவர்கள் மட்டும் தான் மவ்லூது ஓதி வருகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் மவ்லூது ஓதிவிட்டு தப்ரூக் – பிரசாதம் வழங்குவதற்கு முன்பு போல யாரும் பணம் வழங்குவதில்லை. இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்யக் கூடிய பிரச்சாரத்தை யாரும் நம்பி விட வேண்டாம். அவர்கள் எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் நாங்கள் மவ்லூது ஓதுவதை நிறுத்த மாட்டோம். நீங்களும் தப்ரூக் வழங்க பணம் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டாம் என்று கெஞ்சாத குறையாக அறிவிப்பு செய்துள்ளனர்.
முத்தமிழ் நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலில் மவ்லூது பாடல்கள் எத்தகை மாபெரும் பாவம் என்பதை விளக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் கிளை சார்பாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, மவ்லூது ஓதுவதும் மீலாது விழா கொண்டாடுவதும் நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பாவங்களாகும் என்பதை விளக்கி போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளிவாசல் நிர்வாகம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை இந்தத் துண்டு பிரசுரங்களை இங்கு விநியோகிக்க கூடாது என்று விரட்டியுள்ளனர். அந்த ஜமாஅத்தினரின் எதிர்ப்பையும் மீறி அந்தப்பகுதி மக்களுக்கு துண்டு பிரசுரங்களின் வாயிலாக சத்தியப் பிரச்சாரம் எத்தி வைக்கப்பட்டது.
மாபெரும் ஏகத்துவ எழுச்சி:
ஒரு கால கட்டத்தில் மவ்லூது ஓதுவதற்கும், மவ்லூது ஓதிவிட்டு வழங்கப்படும் தப்ரூக்கைப் பெறுவதற்கும் கூட்டம் அலைமோதும்.
12நாள் ஓதப்படும் மவ்லூதுக்கு தப்ரூக் வழங்க மக்கள் பணத்தைப் போட்டிபோட்டு வாரி இரைத்து பணம் செலவழித்து வந்தனர். உச்சகட்டமாக கடைசி நாள் மவ்லூது ஓதிவிட்டு ஸ்பெஷல் தப்ரூக்காக தேங்காய்ச் சோறு ஆக்கி வழங்கும் வழக்கமும் பல பகுதிகளில் இருந்து வந்த நிலை மாறி தற்போது ஒரு சீப்பு வாழைப்பழத்திற்கே பள்ளிவாசல் நிர்வாகம் அல்லோல கல்லோலப்படுகின்றது என்றால் இந்த நிலைமைக்கு எழுச்சிமிகு ஏகத்துவப் பிரச்சாரமே காரணம் என்றால் அதுமிகையல்ல.
மவ்லூது ஓதுவது மிகப் பெரிய பாவம் என்று பிரச்சாரம் செய்து அதில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், அந்தப் பாவத்திற்கு பணம் மற்றும் தப்ரூக் வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதும் பாவமாகும் என்று மக்களுக்கு விளக்கியதும், அந்த தப்ரூக்கை வாங்கி உண்பது பாவம் என்று மக்களுக்குத் தெளிவுபடுத்தியதும், தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க பிரச்சாரமும் தான் இந்த மாபெரும் மாற்றத்திற்கு காரணம் என்பதை ஒவ்வொரு சுன்னத் ஜமாஅத்தினரும் உணராமலில்லை. அதிலிருந்து அவர்களும் விடுபடும் காலம் மிக தொலைவிலில்லை. இன்ஷா அல்லாஹ்…
No comments:
Post a Comment