Saturday, 20 August 2011

ஆடை களைய மறுத்ததால் தனிமைச் சிறையில் அடைப்பு


நப்லஸ் நகரைச் சேர்ந்த பலஸ்தீன் இளைஞர் ஒருவரை, சோதனை என்ற பெயரில் ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்குமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் நிர்ப்பந்தித்த சம்பவம் இஸ்ரேலிய ரமோன் சிறைசாலையில் இடம்பெற்றுள்ளது.
அதனை ஏற்க மறுத்ததால் ஆத்திரமுற்ற ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம், முஹம்மத் நாஃபித் திவைகத் எனும் பலஸ்தீன் இளைஞரை 21 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துவைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீப காலமாக சோதனையிடுதல் என்ற பெயரில் பலஸ்தீன் கைதிகளிடம் ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்குமாறு கட்டளையிடும் புதிய நடைமுறைமையொன்றை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் கைக்கொண்டு வருகின்றது.
மேற்படி சம்பவத்தில் நிர்வாணமாய் நிற்க மறுத்தார் என்ற ஒரே காரணத்தினால் இளைஞரான பலஸ்தீன் கைதி இருட்டான ஒடுங்கிய சிறைக் கொட்டடியொன்றில் யாரையும் சந்திக்க முடியாத தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் நடைமுறையில் இருந்துவரும் மனித குலத்தைத் தலைகுனியச் செய்யும் மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும் என விமர்சிக்கும் ஏனைய பலஸ்தீன் கைதிகள், மனித உரிமை அமைப்புகள் தலையிட்டு இவற்றை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment