கூட்டு துஆ என்றால் என்ன?
ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ எனக் கூறப்படுகிறது.சுருக்கமாக சொல்லப் போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்பதே கூட்டு துஆ.சிலர் கூட்டு துஆவிர்க்கும் குனூத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருப்பார்கள்.குனூத் என்பது தொழுகையிலேயே சப்தமிட்டு கேட்கப் படும் துஆ, ஆனால் கூட்டு துஆ என்பது தொழுகைக்கு பிறகு கேட்கப் படும் துஆ.நாம் கூட்டு துஆ பற்றி மட்டுமே இங்கே விளக்குகிறோம். கூட்டு துஆ , ஜனாஸா நல் அடக்கத்தின் போதும், ஹஜ் பயனம் செல்லும் போதும், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பெருநாள் தொழுகைகளின் பின்பும் குறிப்பாக சமூக, சமய விவகாரங்கள் போன்ற நேரத்திலும் கூட்டாக துஆ கேட்கப்படுகிறது.இந்த ஒரு செயல் முழுக்க முழுக்க வணக்கம் சம்பந்தப் பட்ட விஷயம்.வணக்கம் சம்பந்தமாக நாம் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டி தந்திருக்க வேண்டும்.
நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி )
நூல்: முஸ்லிம் (3541)
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்ட லில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு(பித்அத்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி )
நூல்: முஸ்லிம் (1573)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன் 33:36)
கூட்டு துஆவுக்கு ஆதாரம் உள்ளதா ?
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களா’ என்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுல் வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே,மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரழி), நூல்:புகாரி ஹதீஸ் எண் 1014
மேற்கண்ட வசனத்தில் மழை வேண்டி தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கிறார்.ஆகவே இந்த நபிமொழி மழை வேண்டி துஆ கேட்பதற்கு மட்டும்தான் பொருந்தும்.ஆனால் சஹாபாக்கள் இந்த துஆவுக்கு ஆமீன் சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது கூட்டு துஆவுக்கு ஆதாரம் ஆகாது.
‘ஒரு கூட்டம் ஒன்று சேரந்து சிலர் பிரார்த்திக்க ஏனையவர்கள் ஆமீன் சொன்னால் அதை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்’ என தபரானி, இப்னு அஸாகிர்,ஹாகிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது.ஆனால் இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும்.
சூரா யூனூஸ் 89ம் வசனத்தில் அல்லாஹ் மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இருவரையும் பார்த்து ‘உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது’ எனக் கூறுகின்றான். ஆனால் அதற்கு முந்திய வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் மாத்திரம்தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். எனவே,மேற்படி சந்தர்ப்த்தில் மூஸா (அலை) அவர்கள் பிரார்த்திக்க – துஆ ஓத ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் சொன்னார்கள் எனக் இமாம் பைஹகீ அவர்களின் சுஅபுல் ஈமான் எனும் நூலில் இடம்பெறும் அனஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் இன்னொரு ஆதாரம்.
எனினும் மேற்படி செய்தியை அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து அறிவிக்கும் ஸர்பீ பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர். அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து ஆதாரமற்ற செய்திகளை அறிவிப்பவர் என அறிவிப்பாளர் பற்றி ஆய்வு செய்த அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
கூட்டு துஆவிர்க்கு எதிரான ஆதாரங்கள்
அல்லாஹ் தன் திருமறையில் , துஆ எப்படி கேட்க வேண்டும் என்று நமக்கு தெளிவாக கற்றுத் தருகிறான்.
உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர் ஆன் 7:205)
அவர் (ஜக்கரியா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)
”நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு‘ என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.) ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி (6338) முஸ்லிம் (4837)
உங்களில் எவரேனும் பிரார்த்தித்தால் ‘நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!‘ என்று கேட்க வேண்டாம். (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். மகத்துவம் மிக்கதைக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ் வழங்கிய எந்த ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4838)
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்” (அல்குர் ஆன் 7:55)
சப்தமிட்டு ஒருவர் துஆ கேட்டு அதற்க்கு சப்தமாக ஆமீன் கூறுதல் நிச்சயமாக ரகசியமானதாக இருக்க முடியாது.இந்த சமயத்தில் நாம் இன்னொன்றையும் சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்.கூட்டு துஆ தமிழ் மக்களிடையே 99% அரபு மொழியிலேயே கேட்கப் பட்டு வருகிறது.அதில் 99% பேருக்கு அரபி தெரியாது.நாம் எந்த துஆவிற்க்கு ஆமீன் கூருகிறோமோ அதற்க்கு நமக்கே அர்த்தம் தெரிய வில்லை என்றால், எதற்காக நாம் துஆ கேட்க வேண்டும்? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இன்னொரு அவலத்தையும் கேளுங்கள் , யார் அந்த துஆவை சப்தமிட்டு அரபு மொழியில் மொழிகிராரோ அவருக்கே கூட அவர் என்ன துஆ செய்கிறார் என்று தெரியாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது .இப்படி அர்த்தம் புரியாமல் துஆ கேட்பதிலும் அதற்க்கு ஆமீன் கூறுவதிலும் என்ன பணிவு இருக்க முடியும்.
பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள். அச் சத்தோடும் ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7:56)
அல்லாஹ் நம்மை ஆசொயோடு பிரார்த்தனை செய்யக் கட்டளையிடுகிறான்.பல பேர் கூடு துஆவில் தூங்கிக் கொண்டு ஆமீன் சொல்வதை கண் கூடாக பார்த்திருக்கிறோம்.ஆகவே அல்லாஹ் குறிப்பிட்ட பணிவும் இதில் இல்லை ரகசியமும் இல்லை ஆசையும் இல்லை .
.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்றும்'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்" என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ,இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூ மூஸா அஷ்அரீ(ரலி)
புகாரி 2992, 4205,6384,6409,6610,7386 முஸ்லிம் 4873
இந்த ஹதீஸ் திக்ருகளை பற்றி கூறப பட்டாலும்,அல்லாஹ் காது கேட்காதவன் இல்லை,அவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.ஆகவே கூட்டு துஆ என்பது நிச்சயமாக ஒரு வழிகேடு,ஆகவே கூடு துஆவை நாம் புறக்கணிக்க வேண்டும்.
கூட்டு துஆவில் உள்ள பாதிப்பு
கூட்டு துஆவை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்து இருக்கிறார்கள் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தோம்.அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாததை செயல்படுத்தும் போதுதான் பல பாதிப்புகள் ஏற்படும்.கூட்டு துவாவில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்னவென்றால் , கூட்டு துஆவில் கலந்து கொள்பவர், தான் தனியாக துஆ கேட்க தேவையில்லை என்று எண்ணுகிறார்.தன்னுடைய சொந்த தேவைகளை அவரவர் கேட்க முடியாத நிலைமை இங்கே ஏற்படுகிறது.துஆ கேட்பவருக்கு குழந்தை இல்லாமல் இருந்து ஆமீன் கூருபவர் , இனி தனக்கு குழந்தையே வேண்டாம் என்ற நிலையில் இருந்து ,துஆ கேட்பவர் தனக்கு குழந்தை வேண்டி துஆ செய்தால் சரியாக இருக்காது. நிச்சயமாக ஒருவருடைய தேவையை மற்றவர் அறிந்திருக்க மாட்டார்.அதுமட்டுமல்லாமல் உங்களுடைய எல்லா தேவைகளையும் என்னிடம் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும் என்னையே நம்பட்டும் அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2:188)
தொழுகையில் தாமதமாக சேர்ந்தவர்கள் கூட்டு துஆவினால் ஒழுங்காக தொழ முடியாத நிலையும் ஏற்படுகிறது.இரேண்டாவது ஜமாத் அமைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.குர்ஆன் வசனங்கள் ஒதப் படும் போது நாம் அதை செவிமடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 7:204)
இப்படி இருக்க இரேண்டாவது ஜமாத்தில் குர்ஆன் வசனங்கள் ஓதப் படும்போது கூட்டு துஆவும் நடந்துக் கொண்டிருப்பதை நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.
மேலும் பர்லு தொழுகைக்கு பின் இமாமை கொண்டே துஆ கேட்டு பழகிவிட்டதால் ஒரு சிலர் தமது சொந்த விஷயங்கள், 3,7,40 ஆம் பாத்திஹா ,பெயர் வைப்பு , திருமணம் போன்றவற்றிற்கும் பயணம் செல்லும்போதும் , ,விருந்து ஆரம்பம் முடிவிலும்,மட்டுமல்லாது ,நோன்பு,ஹஜ் போன்ற கடமையை செய்ய தொடங்கும்போதும்கூட இமாமே நேரில் வந்து கூட்டு துஆ என்னும் நபி (ஸல்) அவர்கள் காட்டி தராத ஒரு பித் அத்தை செய்து நமக்கு துஆ செய்ய வாய்ப்பளிக்காமல் செய்து விடுகிறார் , நீங்கள் நன்குசிந்தித்து பார்த்தால் இந்த வழிகேடுகள் அனைத்திற்கும் ஆரம்பம் எது என்று புரிந்துகொள்வீர்கள்
கூட்டு துஆ (சில )இமாம்களுக்கு வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாகவே இருப்பதால் அதை அவர்கள் விட்டுத்தர மாட்டார்கள் எனவே இந்த பித் அதை தவிர்த்து நேரடியாக உள்ளச்சத்துடன் இறைவனிடம் துஆ செய்து வருவதே நபி (ஸல்) காட்டி தந்த வழிமுறையாகும்.
விழிப்புணர்வு
கூட்டு துஆவிர்க்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கூட்டு துஆவினால் ஏற்படும் விளைவுகளையும் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் கூட்டு துஆ ஒரு தெளிவான பித்அத் , நிச்சயமாக இது நம்மை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் ஒரு செயலாக இருக்கிறது என்பதை இந்த தவறான செயலை செய்யக் கூடிய மக்களிடம் எச்சரிக்கை ஊட்ட வேண்டும்.
No comments:
Post a Comment