Saturday, 20 August 2011

பலஸ்தீன் சிறுவனின் பார்வையைப் பறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை


நப்லஸ் நகரைச் சேர்ந்தவன் இஸ்மாயீல் துர்க்கி முஹம்மது அகீல். ஆறு வருடங்களுக்கு முன் குடும்பத்தைப் பராமரித்துவந்த மூத்த சகோதரன் இறந்துபோய் விட்டதால், அவனால் தன் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஓர் உணவகத்தில் வேலைசெய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு.
தன் சின்னஞ்சிறிய தோள்களில் குடும்பச் சுமையை மகிழ்ச்சியோடு தாங்கிய அவனின் வாழ்க்கை 2002 ஆம் ஆண்டு திசைமாறிப் போனது.
ஒரு நாள் மாலைநேரம். நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான் இஸ்மாயீல். திடீரென்று இஸ்ரேலியக் காவல்துறை வாகனங்கள் அப்பகுதியில் வட்டமிடலாயின. சற்றுத் தொலைவில் சிறுவர்கள் கல்லெறிந்ததில் ஓர் இஸ்ரேலியச் சிப்பாய் காயமடைந்துவிட்ட ஆத்திரம் அவர்களுக்கு. ஒரு காவல்துறை வாகனம் விளையாடிக் கொண்டிருந்த இஸ்மாயில்மீது மோதியது. அலறிக் கொண்டு கீழே விழுந்தான், அந்தப் பலஸ்தீன் சிறுவன். நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து ஆக்கிரமிப்புக் காவல்துறையினர் அவசரமாக இறங்கினர். தமது வாகனத்தில் மோதிப் படுகாயமுற்ற சிறுவனுக்கு முதலுதவி செய்யப் போகிறார்கள் என சற்றுத் தொலைவில் நின்றிருந்தவர்கள் நினைத்ததற்கு மாறாக, கைகளாலும் துப்பாக்கியின் கைப்பிடி முனைகளாலும் சிறுவன் இஸ்மாயீல் மயங்கி விழுமளவுக்குத் தாறுமாறாகத் தாக்கினர். அதன் விளைவாகக் கோமாவில் வீழ்ந்த அவன், சுமார் ஒருவார காலம் நப்லஸில் உள்ள ரஃபீதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவ்வாறு தன் மகனுக்கு நடந்த அசம்பாவிதத்தைக் கண்ணீர் மல்க விபரித்தார், சிறுவனின் தாய் உம்மு ரஸ்மி.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறையினரின் இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதலின் விளைவாக இஸ்மாயீலின் மண்டையோட்டில் சிறு பிளவொன்று ஏற்பட்டு, தலைக்குள் குருதிக் கசியத் தொடங்கிவிட்டது; அனேகமான பற்கள் உடைந்து விட்டன; முதுகெலும்பில் இடையறாத வலி; கண்கள் 70 சதவீதமான பார்வைத் திறனை இழந்துவிட்டன என பிரபல மனித உரிமைகள் அமைப்பொன்றின் ஆய்வாளர் அஹ்மத் அல் பெய்தாவி தெரிவித்துள்ளார்.
மேற்படி அவலமான சம்பவம் இடம்பெற்று சரியாக 8 வருடங்களின் பின்னர் ஹவாரா சோதனைச் சாவடியில் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் 16 வயதான இஸ்மாயில் கைதுசெய்யப்பட்டு, இஸ்ரேலின் மெகிட்டோ ஆக்கிரமிப்புச் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். 20 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவனுக்கு அங்கேயும் சித்திரவதைகள் தொடர்ந்தன.
தனக்குள்ள பார்வைக் குறைபாடு, முதுகு மற்றும் முழங்காலில் கடுமையான வலி என்பன குறித்து முறையிட்டு, மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்குமாறு மன்றாடி, சிறுவன் இஸ்மாயில் முன்வைத்த கோரிக்கைகள் யாவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தினால் அலட்சியப்படுத்தப்பட்டன. விளைவு? தற்போது தன் கண் பார்வையை முற்றாக இழக்கும் நிலையை அவன் அடைந்துவிட்டான் என பெய்த்தாவி தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல. போலியான பாதுகாப்புக் காரணங்களைக் கூறி கடந்த 2010 ஜூன் மாதம் அவன் கைதுசெய்யப்பட்டது முதல் இன்றுவரை தன்னுடைய தாயாரை ஒருதரமேனும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது மிகத் தெளிவான மனித உரிமை மீறலாகும் என அஹ்மத் அல் பெய்தாவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் நோயாளிகளான பலஸ்தீன் கைதிகளுக்குத் தொடர்ந்தும் உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்க மறுத்து வருவதால், அவர்களில் எத்தனையோ பேர் சிறையிலேயே மரணிக்கிறார்கள் அல்லது குணமாக்கவே முடியாத நோய் நிலைமையை அடைகிறார்கள். எனவே, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இது தொடர்பில் உடனடியாகத் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்பதே மனிதாபிமான ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


நன்றி – இந்நேரம்.com

No comments:

Post a Comment