Saturday, 20 August 2011

பாலியல் கல்விக்கு ஆதரவாக பழமைவாத இமாம்

பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தவேண்டும் என்று சவூதி நாட்டைச் சேர்ந்த பழமை வாத இமாம் ஒருவர் குரல் கொடுத்திருக்கிறார். 

சவூதி அரேபியாவில் பழமைவாத ஆளுமை மிக்க புரைதா மாகாணத்தில் உள்ள பெரிய பள்ளியான இமாம் முஹம்மது இப்னு அப்துல்வஹ்ஹாப் பள்ளியின் இமாமாக ஸாலிஹ் அல் வன்யான் என்பவர் உள்ளார்.
கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வாராந்திர தொழுகையின் போதான உரையில் "இந்தப்(பாலியல்) பிரச்னை பற்றி வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவேண்டும்" என்றும், "சமூகத்தில் அதிகரித்துவரும் சிறார் வன்புணர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். "இதைப் பேசுவது வெட்கக்கேடானது அல்ல" என்றார் அவர். 

சவூதியிலும் பாலியல் கல்வியை பள்ளிகளில் அறிமுகப்படுத்த அறிஞர்கள்  தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போதிலும், பள்ளி இமாம் ஒருவரின் வெளிப்படையான பேச்சாய்  இது முதல்முறை என்பது குறிக்கத் தக்கது. 

இந்த இமாமின் பேச்சை அரபுலீக் அமைப்பின் சட்ட வல்லுனரும் அதன் மனித உரிமைகள் குழுவின் அங்கத்தினருமான ஹாதி அல் யாமி வரவேற்றுள்ளார். "சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வு தர வேண்டியது கட்டாயம் " என்றார் அவர். "தவறாகப் பயன்படுத்தப்படும் சிறார்கள் அது பற்றிய அறிவையோ, அது குறித்து  முறையிடும் வகையையோ பெறாமல் இருப்பதை இதனால் மாற்றலாம் " 

அஹ்மத் அல் ஹரீரி என்னும் உளவியல் வல்லுனரும் இமாமின் பேச்சை வரவேற்றுள்ளார். "இக்கல்வியை சிறுவயதிலேயே பெறுவதன் மூலம் தம் மீதான துஷ் பிரயோகத்தை யாரும் தடுக்கலாம்" என்றார் அஹ்மத். 

பாலியல் குறித்த தர்க்கப்பூர்வமான; விஞ்ஞானப்பூர்வ   விளக்கங்களை குர்ஆன் மற்றும் நபிவழிகளில்அளித்த முதன்மையான மதம் இஸ்லாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ, உளவியல் அறிஞர்கள் ஒன்றிணைந்து கல்வித்துறை மற்றும் அதன் சார்பு அமைப்புகளுடன்   ஆலோசித்து பாலியல் கல்வியைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த ஆவன செய்யலாம் என்று பெண் மருத்துவர் மாஹா அல் முனீஃப் கருத்து கூறியுள்ளார்.





நன்றி – இந்நேரம்.com



No comments:

Post a Comment