ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 08)
ஜிஹாதின் பெயரால் நடந்த உஸ்மான் (ரலி) கொலை! அதிர்ச்சி வரலாறு.
(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasmin M.I.Sc )
"ஜிஹாத்' என்ற சொல்லின் விளக்கத்தையும், ஜிஹாத் (கிதால்) உட்பட இறைவன் நமக்கு விதியாக்கிய எந்தக் கடமையையும் நாம் விரும்பியவாறு செய்ய முடியாது; அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வகுத்துத் தந்த விதிமுறைகளின் படியே நிறைவேற்ற வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் இது வரை பார்த்தோம்.
ஜிஹாத் (கிதால் - ஆயுதப் போர்) பற்றி முழுமையான ஆய்வு செய்யாமல் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டதால் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள துயரச் சம்பவங்கள் பற்றியும், அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பற்றியும் பார்ப்போம்.
ஜிஹாத் (கிதால்) என்ற பெயரில் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்த போர் முனைகளில் வெட்டி வீழ்த்தப்பட்ட இஸ்லாத்தின் எதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்களுக்குப் பிறகு ஜிஹாத் (கிதால்) என்ற பெயரில் நடந்த கலகங்களினாலும், உள்நாட்டுக் குழப்பங்களினாலும் முஸ்லிம்களால் வெட்டிச் சாய்க்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று சொல்லுமளவிற்கு பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
இத்தகைய துயரச் சம்பவங்கள் ஏற்படாமலிருக்க எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை பெருமானார் (ஸல்) அவர்கள் வழங்காமலிருக்கவில்லை. இது பற்றிய எச்சரிக்கையைச் செய்யாமலும் மரணிக்கவில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது, அரஃபா பெருவெளியில் ஆற்றிய உரையில், முஸ்லிம்களின் உயிர்களும், உடைமைகளும், மானமும் கியாமத் நாள் வரை புனிதம் வாய்ந்தது என்று பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். தனக்குப் பிறகு முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டு இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)களாய் ஆகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் எச்சரித்திருக்கிறார்கள்.
பெருமானாரின் இறுதி ஹஜ் உரை.
நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையில், "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களுடைய புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்கள் செயல்கள் குறித்து உங்களிடம் விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகேடர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில் இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகின்றதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவர்களில் சிலரை விட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராக இருக்கலாம்'' என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "நான் (உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா? நான் உங்களிடம் சேர்த்து விட்டேனா?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி 7447
நபி (ஸல்) அவர்கள் விடை பெறும் ஹஜ்ஜின் போது, (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், "மக்களை மவுனமாக இருக்கச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். பின்னர், "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 6869
மேலும் பார்க்க: ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் எண்: 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6785, 6868, 7077, 7078, 7079, 7080
வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு எண்ணிலடங்கா துன்பங்களை அனுபவித்தும், அரும்பெரும் தியாகங்களைச் செய்தும், ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டி, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் நிறுவினார்கள்.
அந்த சாம்ராஜ்ஜியத்தின் தூண்களான முஸ்லிம்கள் (நபித்தோழர்கள்) தங்களுக்கிடையே சண்டையிட்டு அழிந்து விடக் கூடாது, இஸ்லாமிய சாம்ராஜ்யம் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் எந்த அளவுக்குக் கவலையும், அக்கறையும் கொண்டு, தங்களின் இறுதிக் காலத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் எடுத்தியம்புகின்றன.
ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் மறைவிற்குப் பின் இன்று வரை முஸ்லிம் சமுதாயம் அவர்களின் எச்சரிக்கையை மறந்து செயல்படக் கூடிய காட்சியைத் தான் காண முடிகிறது. அதனால் தான் முஸ்லிம்களுக்குள் குழப்பமும், பிளவும், பிரிவும் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளக் கூடிய பரிதாப நிலை ஏற்பட்டது.
ஜிஹாத் (கிதால்) என்ற பெயரால் முஸ்லிம்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கும் அளவிற்கு நிலைமை மோசமானதற்கு என்ன காரணம்? ஒன்றுபட்ட சமுதாயத்திற்கு மத்தியில் குழப்பம் எங்கிருந்து துவங்குகிறது? அது எவ்வாறு தொடர்கிறது? என்பதை பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் இஸ்லாத்தின் ஆரம்ப வரலாற்றிலிருந்து தொடங்கி தொடர்ந்து பார்ப்போம்.
பொதுவாகவே நபி (ஸல்) அவர்களின் காலந்தொட்டே முனாஃபிக் என்றழைக்கப்படும் நயவஞ்சகர்களின் ரகசிய நடவடிக்கைகள் முஸ்லிம்களைப் பெரிதும் பாதித்தே வந்துள்ளது. எதிரிகளையாவது அடையாளங்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும். ஆனால் முனாஃபிக்குகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடக்க இயலாது. பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் முனாஃபிக்குகள் பற்றி அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்ததால், மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்கலானார்கள். அவர்களின் நயவஞ்சகத்தனம் எடுபடவில்லை. இஸ்லாத்தை அழிப்பதற்காக முஸ்லிம்களை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை.
பெருமானார் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீஃபாவாக அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் நல்ல நிர்வாகத் திறமையுடன், சிறந்த ஆட்சித் தலைவர்களாக திகழ்ந்தார்கள்.
இவ்விருவரின் ஆட்சியின் போதும், முனாஃபிக் (நயவஞ்சகர்)கள் இருந்த போதும், அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் நரித்தனம் எடுபடவில்லை. எனவே எவ்வித குளறுபடிகளோ, கலகமோ, உள்நாட்டுக் குழப்பமோ ஏற்படவில்லை.
முனாஃபிக்குகள் விஷயத்தில் உமர் (ரலி) அவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். அதன் விளைவாக உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் முனாஃபிக்குகள் அவர்களைக் கொலை செய்தார்கள்.
உமர் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள்.
அதன் பின்னர் தான் முதன் முதலாக குழப்பம் தலை தூக்கியது. முனாஃபிக்(நயவஞ்சகர்)களும் தங்களின் கைவரிசையைக் காட்டத் துவங்கினார்கள். அவர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட சிறு சிறு அதிருப்தியால் ஏற்பட்ட குழப்பம் புரட்சியாக வெடித்து இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் போய் முடிந்தது.
இந்தத் துயரச் சம்பவத்தை நிகழ்த்துவதற்கு கையிலெடுக்கப்பட்ட ஆயுதம் "ஜிஹாத்' தான். ஜிஹாத் என்ற பெயரில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உஸ்மான் (ரலி) அவர்கள் மீது ஒரு சாராருக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன?
அந்த அதிருப்தி நியாயமானது தானா?
அவர்களது ஆட்சிக்கு எதிராக "ஜிஹாத்' பிரகடனம் ஏன் செய்யப்பட்டது?
அவ்வாறு செய்யப்பட்டது சரியா?
என்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை பற்றிய வரலாற்றுப் பதிவுகளுக்குள் செல்வோம்.
எந்த ஒரு உயர்ந்த அதிகாரப் பதவியாக இருந்தாலும், அந்தப் பதவியிலிருப்போரின் நண்பர்கள், உறவினர்கள் என நெருக்கமானவர்கள் யாராக இருந்தாலும், தங்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அரசாங்க வேலைகளையோ அல்லது சிறு சிறு அதிகாரப் பதவிகளையோ பெற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். அவர்களது முயற்சிக்கு அப்பதவியிலிருப்பவர் வளைந்து கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிப்பார்கள். இதைப் பார்க்கக் கூடிய நடுநிலையாளர்கள் இதை எதிர்க்கக் கூடிய நிலையை பொதுவாக நாம் பார்த்து வருகிறோம்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது இது தான் நடந்தது. அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமான குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) அவர்களின் கோத்திரமான "பனூ உமைய்யா' கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது என்பது தான்.
இஸ்லாமிய வரலாற்றில் நபி (ஸல்) அவர்கள் குலம், கோத்திரம், உறவு, நட்பு ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஆட்சி புரிந்தார்கள். பெருமானாரின் கோத்திரமான ஹாஷிம் கோத்திரத்தில் எத்தனையோ பேர் இருந்தும் அலீ (ரலி) அவர்களுக்கு மட்டும் தான் தகுதி அடிப்படையில் பல பொறுப்புகளை அளித்தார்கள்.
அவர்களுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், தமது கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் எந்தப் பதவியையும் அளிக்கவில்லை.
அவர்களுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உமர் (ரலி) அவர்கள் தங்களின் பத்தாண்டு கால ஆட்சியில், தமது கோத்திரத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நபருக்கு மட்டும் தகுதி அடிப்படையில் பதவியளித்தார்கள். அதுவும் குறுகிய காலத்திலேயே அந்த நபரையும் பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள்.
திறமை - தகுதியின் அடிப்படையில் உறவினர்கள், நெருக்கமானவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பது அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ தடை செய்த காரியம் அல்ல. ஆனாலும், தேவையற்ற சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காகவே அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
எவ்வளவு தான் நேர்மையாகவும், திறமையாகவும் ஆட்சி செய்தாலும் உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டினால் நிச்சயமாக அவப்பெயரையும், குழப்பங்களையும் சந்தித்து, ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்த காரணத்தால், உமர் (ரலி) அவர்கள் தமது இறுதிக் காலத்தில், தனக்குப் பிறகு ஆட்சித் தலைவராக வரலாம் என்று அவர்கள் கருதிய உஸ்மான் (ரலி), அலீ (ரலி), ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) ஆகிய மூவரையும் தனித்தனியே அழைத்து,
"எனக்குப் பிறகு நீங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்க நேரிட்டால், முஸ்லிம்களின் கடிவாளத்தை உங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த எவரிடமும் கொடுத்துவிடக் கூடாது'' என்று வாக்குறுதி வாங்கினார்கள். (ஆதார நூல்: அத்தபரீ)
பனூ உமையாக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஜிஹாத் என்னும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை வரிசையாகக் காண்போம்.
முதலில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டான உறவினர்களைப் பதவியில் அமர்த்தியது பற்றி பார்ப்போம்.
மர்வான் பின் ஹகம்.
உஸ்மான் (ரலி) அவர்களின் சிறிய தந்தையான ஹகம் பின் அபீ அல்ஆஸ் என்பவர் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றவர். அதன் பிறகு மதீனாவிற்கு குடியேறினார். அவர் மதீனாவில் இருக்கும் போது, அவரது நடவடிக்கைகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காததால் ஹகமை மதீனாவை விட்டு வெளியேறி தாயிஃப் நகருக்கு செல்லும்படி கட்டளையிட்டார்கள். அப்போது மர்வானுக்கு 8 வயது.
அவர் தாயிஃபிலிருந்து மீண்டும் மதீனாவுக்கு வர அனுமதிக்குமாறு ஹகம் விடுத்த கோரிக்கையை, அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் தங்களின் ஆட்சிக் காலத்தில் நிராகரித்து விட்டனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் ஹகமும் அவரது மகன் மர்வானும் மதீனாவுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி உஸ்மான் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே திரும்ப மதீனாவுக்கு அழைக்க, நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்ததாகவும், அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் வாக்குறுதியளித்ததாகவும் அதனடிப்படையிலேயே இருவரையும் மதீனாவுக்குத் திரும்ப அழைத்ததாகவும்'' ஒரு அறிவிப்பில் காணப்படுவதாக இப்னு ஹஜர் (ரஹ்) அல் இஸாபா என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் மீதான நன்னம்பிக்கையின் காரணமாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருப்பார்கள் என்று மக்களும் நம்பினார்கள். ஹகமையும், மர்வானையும் மதீனாவுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டதில் மக்களிடத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால் மர்வான் பின் ஹகமுக்கு தனது ஆட்சியில் செயலாளர் என்னும் பெரிய பதவியை அளித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. தன் மகன் மர்வானின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசாங்க விஷயங்களில் ஹகம் தலையிட்டதையும் மக்கள் எதிர்த்தார்கள்.
அப்துல்லாஹ் பின் ஆமிர்.
பஸ்ராவின் ஆளுநராக அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு, உஸ்மான் (ரலி) அவர்கள் தனது மாமா மகனான அப்துல்லாஹ் பின் ஆமிரை நியமித்தார்கள்.
முஆவியா (ரலி).
பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்த முஆவியா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிரியாவின் ஒரு பகுதியான டமாஸ்கஸிற்கு மட்டுமே ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஹிமஸ், ஃபலஸ்தீன், உர்துன், லெபனான் மற்றும் சிரியா முழுவதையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள்.
இப்போதைய சிரியா, லெபனான், உர்தூன், இஸ்ரேல் ஆகிய நான்கு நாடுகளின் மொத்த நிலப்பரப்புக்கும் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் முஆவியா (ரலி) உட்பட நான்கு ஆளுநர்கள் இருந்தார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் அனைத்தையும் முஆவியா (ரலி) தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து விட்டார்.
மேலும், ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டு மாகாண ஆளுநர் செயல்படுவதற்குப் பதிலாக, சிரியாவின் ஆளுநரான முஆவியா (ரலி), ஜனாதிபதியே தன்னைச் சார்ந்திருக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருந்தார். அந்த அளவுக்கு முஆவியா (ரலி) அவர்களின் ஆதிக்கம் இருந்தது. இதைப் பலரும் ஜீரணிக்கவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் மீதான எதிர்ப்புணர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
வலீத் பின் உக்பா.
வலீத் பின் உக்பா என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். உஸ்மான் (ரலி) அவர்களது தாயாரின் வேறொரு கணவருக்கு பிறந்த சகோதரர். நபி (ஸல்) அவர்கள், பனூ முஸ்தலிக் என்ற கோத்திரத்தினரிடம் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை வலீதிடம் ஒப்படைத்திருந்தார்கள். அவர் அக்கோத்திரத்தினரிடம் சென்று ஜகாத் தொகையைக் கேட்காமல், அவர்கள் தர மறுக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொல்லி விட்டார். நபி (ஸல்) அவர்கள் கடுங்கோபமுற்று, அவர்களுக்கெதிராக படை திரட்டி விட்டார்கள். இதை அறிந்த அக்கோத்திரத்தினர் மதீனாவுக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம் "நாங்கள் ஜகாத் கொடுக்கக் காத்திருந்தோம். ஆனால் இவர் எங்களிடம் வந்து கேட்கவில்லை'' என்ற உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்கள்.
இது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் ஒரு வசனத்தையே இறக்கினான்.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)
(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
(ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)
வலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)
இத்தகைய தன்மையைக் கொண்ட வலீதை சில காலத்திற்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் மீண்டும் பணியில் அமர்த்தினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் இறுதிக் காலத்தில் பனூ தக்ளப் கோத்திரத்தினர் வாழ்ந்த அல்ஜஸீரா பகுதியில் சிறிய அதிகாரியாக பணியமர்த்தினார்கள். (ஆதாரம்: தஹ்தீபுத் தஹ்தீப்,)
உஸ்மான் (ரலி) அவர்கள் தனது ஆட்சியின் போது, சிறு அதிகாரியாக கீழ் மட்டத்தில் பதவி வகித்த வலீத் பின் உக்பாவை திடீரென கூஃபாவின் ஆளுநராக ஆக்கினார்கள். அது வரை கூஃபாவின் ஆளுநராக பதவி வகித்த ஸஃது வின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பதவியிலிருந்து நீக்கினார்கள்.
ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஆரம்ப கால இஸ்லாமியப் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்கள். கல்வியறிவிலும், மார்க்கப் பற்றிலும் வலீதை விட பன்மடங்கு உயர்ந்தவர்கள். மேலும் "மஜ்லிஸ் ஷுரா' என்றழைக்கப்படும் தலைமை ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினர். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என பத்து தோழர்களைப் பற்றி அறிவித்தார்கள். அஷ்ரதுல் முபஷ்ஷரா எனப்படும் அவர்களில் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களும் ஒருவர். எனவே அவர்களை நீக்கியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
பின்னர் வலீத் பின் உக்பா குடிகாரர் என்பதும், ஒரு முறை சுபுஹ் தொழுகையை 4 ரகஅத்துகள் தொழ வைத்தார் என்றும், தொழுகை முடிந்ததும் இன்னும் தொழ வைக்கவா? என்று கேட்டும் அசிங்கப்பட்டு போயிருக்கிறார். இச்செய்தி மதீனா வரை எட்டி மதீனாவில் மக்கள் எல்லாம் பேச ஆரம்பித்து, ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களின் கவனத்திற்குச் சென்ற பின், இதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்கள். அக்குழுவின் விசாரணையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு தண்டனையும் அளிக்கப்பட்டது.
(ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவுது, ஃபத்ஹுல் பாரி, உம்தத்துல் காரீ சுருக்கம்)
வலீத் பின் உக்பாவின் இச்செயலால் மக்கள் தங்களின் அதிருப்தியை உஸ்மான் (ரலி) அவர்கள் மீதே வெளிப்படுத்தினார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸஃது.
பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸஃது என்பவர் இஸ்லாத்தைத் தழுவிய பின்பு "முர்தத்' ஆக மாறினார். மக்கா வெற்றியின் போது, கொல்லப்பட வேண்டியவரின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு முறை அண்ணலாரிடம் இவரை அழைத்துச் சென்று மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அண்ணலார் இவரை மன்னித்தார்கள்.
எகிப்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) என்ற நபித்தோழர் ஆளுநராகப் பொறுப்பேற்று, அந்நாட்டு மக்களின் நன்னம்பிக்கையைப் பெற்று நல்ல செல்வாக்குடன் ஆட்சி நடத்தி வந்தார்கள். இவரது ஆட்சியின் போது, காரிஜியாக்கள் கூட்டத்தினர் முஸ்லிம்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். (காரிஜியாக்கள் என்றால் யார்? அவர்களது கொள்கை என்ன? போன்ற விரிவான விளக்கத்தை பின்னர் பார்க்கவிருக்கிறோம். இன்ஷாஅல்லாஹ்)
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் காரிஜியாக்களின் முயற்சிகளை முறியடித்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள். காரிஜியாக்களின் குழப்பத்தை முறியடித்த பிறகு எகிப்திய மக்களிடத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை விரும்பாத சிலரைக் கொண்டு, அவரை ஆளுநர் பதவியிலிருந்து இறக்குவதற்கு காரிஜியாக்கள் திட்டம் தீட்டினார்கள். அதனடிப்படையில் ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களிடத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு நெருக்கடிகள் தரப்படுகின்றது. ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் முதலில் மறுத்து விட்டார்கள். பின்னர் அளவுக்கு மீறிய நெருக்கடி ஏற்பட்ட பின், அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி விட்டு அப்துல்லாஹ் பின் ஸஃதை எகிப்தின் ஆளுநராக உஸ்மான் (ரலி) அவர்கள் நியமிக்கிறார்கள். ஆனாலும் தொழுகை நடத்தும் அதிகாரத்தை மட்டும் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கே உஸ்மான் (ரலி) அவர்கள் அளித்தார்கள்.(அக்காலத்தில் ஆட்சித் தலைவர்கள் தான் தொழுகைக்கும் இமாமாக இருப்பது வழக்கம்). நாளடைவில் இமாமத் பொறுப்பும் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
உஸ்மான் (ரலி) அவர்களின் இச்செயல் எகிப்திய மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி, மக்களால் உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது.
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை தன்னை (மதீனாவுக்கு) வந்து சந்திக்குமாறு உஸ்மான் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அம்ர் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், தேவையெனில் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னை வந்து பார்க்கட்டும் என்று சொல்லி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.........
No comments:
Post a Comment