Wednesday, 12 October 2011

பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!


4 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட், ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
ISRO launches PSLV-C18 from Sriharikota
பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட்டில், மெகா டிராபிக், எஸ்.ஆர்.எம். சாட், ஜுக்னு, வெசல் சாட் என்ற 4 செயற்கைகோள்கள் அனுப்பப்படுகின்றன. ஆயிரம் கிலோ எடை கொண்ட மெகா டிராபிக் செயற்கைகோள் உலகளாவிய புவிவெப்பம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை ஆராயும். இது இந்தியா-ஃப்ரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவானதாகும்.

எஸ்.ஆர்.எம். சாட், சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இதன் எடை 10.9 கிலோ ஆகும். இது பூமி வெப்பமடைதலையும் (குளோபல் வாமிங்), வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாச்சைடு வாயுக்களால் ஏற்படும் மாசுபாடுகளையும் ஆய்வு செய்யும்.

ஜுக்னு, கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்களின் தயாரிப்பு ஆகும். 3 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைகோளில் அதிநவீன காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியைப் பல கோணங்களில் படம் பிடித்து அனுப்ப முடியும். அந்தப் படங்களின் மூலம் பூமியில் உள்ள வளமான பகுதிகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை ஆராயலாம்.

வெசல் சாட், ஐரோப்பிய நாடான லக்சம்பரில் தயாரிக்கப்பட்டது. 28.7 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைகோள் கடலில் செல்லும் கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிய பெரிதும் உதவும். இந்த 4 செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட் சுமந்து செல்கிறது.

No comments:

Post a Comment