Monday, 19 March 2012

பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு

சென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பணமாகவும், வீடுகளாகவும் எப்படி இவர்களை இத்தனை கோடிகளைச் செலவிட்டு ஆள் பிடிக்க முடிகின்றது? தனியார் தொலைக்காட்சிகளில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய்கள் கட்டணம் செலுத்தி எப்படி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது என்ற சந்தேகங்களுக்கு இப்போதுதான் அரசின் சார்பில் விடையளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நியப் பணம் வருவதாகவும், இவ்வாறு அந்நிய நாட்டு பணம் பெறக்கூடிய 22 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டு தோறும் சுமார் 2000 கோடி ரூபாய் வருகின்றன என்றும், சென்னைக்கு மட்டும் 871 கோடி ரூபாய் வருகின்றது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எவ்வளவு நிதி வந்துள்ளது என்பதை அறிவித்துள்ள மத்திய அரசு, ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மதத்திற்கு ஆள் பிடிப்பதற்காகவே அந்தப் பணத்தில் 90 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை மட்டும் இருட்டடிப்பு செய்துள்ளது.

சாதராண பொதுமக்களுக்குக்கூட தெரிந்த இந்த உண்மை மத்திய அரசுக்குத் தெரிந்திருந்தும் இதை மத்திய அரசு இருட்டடிப்பு செய்தது ஏன் என்று புரியவில்லை.

சுதந்திரப் போராட்ட காலத்தில்தான் திருச்சபைகள் வெள்ளையர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தார்கள் என்றால், நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் அவர்களை எஜமானர்களாக ஆக்கிக் கொண்டு, அவர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு ஆள்பிடிப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது தேசிய அவமானமாகும்.

இதுபோன்ற தேசவிரோத சக்திகளுக்கு அந்நிய நாடுகளில் இருந்து வரும் நிதியாதாரங்களை அறவே தடை செய்ய வேண்டும். இதை இரும்புக் கரம் கொண்டு மத்திய மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும். பணம் கொடுத்து மதமாற்றம் செய்து மனித குலத்தை இழிவுபடுத்தும் இவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தப்பிக்க இடமளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.

அந்நிய சக்திகளின் ஏஜென்டுகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டங்களை நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி : தினமணி

No comments:

Post a Comment