Wednesday, 7 March 2012

மன்ஸில் - அற்புத நோய் நிவாரணி(?) ஓர் ஆய்வு.

மன்ஸில் - அற்புத நோய் நிவாரணி(?)
 ஓர் ஆய்வு.
RASMIN M.I.Sc
மன்ஸில் என்ற பெயரில் ஓதப்படும் புத்தகத்தின் உண்மைத் தன்மை தொடர்பாக “அழைப்பு” இஸ்லாமிய மாத இதழில் நான் எழுதி வரும் தொடர் ஆக்கத்தின் முதல் பகுதியை இங்கு வெளியிட்டுள்ளேன். ஒவ்வொரு மாத அழைப்பிலும் இதன் தொடர் வெளியிடப்படும் போது எனது தளத்திலும் அதனை வெளியிடுவேன் என்பதை வாசகர்களுக்கு அன்பாய் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்ஸில் என்ற ஒரு புத்தகம் காலா காலமாக முஸ்லீம்கள் மத்தியில் ஓதப்பட்டு வருவதை நாம் அறிவோம். அற்புத நோய் நிவாரணி என்ற அடை மொழியோடு அச்சிடப்படும் இந்தப் புத்தகம் பொதுவாக தப்லீக் மற்றும் தரீக்காக்களை மார்க்கமாக நினைக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும்.

யாராவது இறந்து விட்டால் அவருடைய பெயரால் கத்தம் ஓதுதல் என்ற மார்க்கத்தில் இல்லாத காரியத்தை செய்பவர்கள் இந்த நூலை மரணித்தவரின் பெயரால் அச்சிட்டு வினியோகம் செய்வார்கள். அந்தப் புத்தகத்தின் உள் அட்டையில் இன்னாரின் பெயரால் அவர் மரணித்ததற்காக அவரின் மறுமை மோட்சத்திற்காக இது அச்சிடப்பட்டது என்பதையும் குறிப்பிடுவார்கள்.

அது மட்டுமன்றி பெரும்பாலான வீடுகளில் பெண்கள் இதைத் தான் புனித நூலாகக் கருதுகிறார்கள் காரணம் இதில் அடங்கியிருக்கும் சில செய்திகள் – குறிப்பிட்ட அத்தியாயத்தை ஓதினால் அந்த நோய் நீங்கும், வருமை நம்மை விட்டு விலகும் என்றொல்லாம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதினால் தான் இந்தப் புத்தகத்தை மிகவும் புனித நூலாக நமது பெண்கள் நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் மஃரிப் தொழுகைக்குப் பின் மற்றும் சுப்ஹுத் தொழுகைக்குப் பின் இந்த மன்ஸில் என்ற புத்தகத்தை ஓதுவார்கள் இறுதியில் அதில் உள்ள 40 ஸலவாத்துக்களை(?) ஓதி முடிப்பார்கள்.

இந்தத் தொடர் மூலமாக மன்ஸில் என்ற இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக ஆராய இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

முன் அட்டையே மூடலாக………………….

மன்ஸில் என்ற இந்தப் புத்தகத்தின் முன் அட்டையையே மூடலாக அமைத்திருப்பார்கள். அதாவது இதன் முன் அட்டையில்……

மன்ஸில் - சூரா யாஸீன், சூரா தபாரக், சூரா வாகிஆ, சூரா ஜும்ஆ, சூரா அர்ரஹ்மான், சூரா நூஹ், சூரா முஜ்ஜம்மில், சூரா ஸஜ்தா, சூரத்துல் கஹ்ப், சூரா துகான், வழீஃபா நபவிய்யா மற்றும் நாற்பது ஸலவாத்தும் அவற்றின் சிறப்புகளும் என்று ஒரு விளம்பரம் போடப்பட்டிருக்கும்.

இந்த வாசகத்தை பார்த்தவுடன் ஏதோ அற்புத நோய் நிவாரணி போல்தான் உள்ளது என்று மக்கள் எண்ணத்தலைப்பட்டு இந்த புத்தகத்தை வாங்குகிறார்கள்.

உண்மையில் இதில் உள்ள தகவல்களை நாம் ஆய்வு செய்து பார்க்கின்ற நேரத்தில் குர்ஆன் அத்தியாயங்களை குறிப்பிட்டு அவைகளுக்கு நபியவர்களோ, அல்லாஹ்வோ சொல்லித் தராத சிறப்புகளையெல்லாம் இருப்பதாக வெரும் கப்ஸாக்களைக் கொண்டு கட்டமைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.

ஷைகுல் ஹதீஸின் ஹதீஸ் கலை ஞானம்(?)

இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர் பெயரைக் குறிப்பிடும் போது “ஷைகுல் ஹதீஸ் குத்புல் அக்தாப், மவ்லானா முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத்” என்று பெருத்த அடைமொழியோடு குறிப்பிட்டிருப்பார்கள். பெரியதொரு ஹதீஸ் கலை விற்பன்னராக இவரைக் காட்ட முனைவார்கள்.

இவர்தான் தப்லீக் ஜமாத்தினர் போற்றிப் புகழும் தஃலீம் என்ற புத்தகத்தையும் தொகுத்தவர். அந்தப் புத்தகத்தையும், மன்ஸில் என்ற இந்தப் புத்தகத்தையும் படிப்பவர்கள் இவரின் ஹதீஸ் கலை ஞானத்தை(?) நன்றாக அறிந்து கொள்ள முடியும்.

அதிகமான இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமாக செய்திகளைக் கொண்டுதான் இவர் தனது புத்தகங்களை தூபமிட்டிருக்கிறார். இவருக்கும் ஹதீஸ் கலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கும் போது இவருக்கு ஏன் இந்த “ஷைகுல் ஹதீஸ் குத்புல் அக்தாப்” அடை மொழி?

இப்போது புத்தகத்தின் உள்ளே உள்ள கருத்துக்களை வரிக்கு வரி ஆராய்வோம்.

புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஒரு திருமறை வசனத்தைக் குறிப்பிட்டு புத்தகம் ஆரம்பிக்கப்படுகிறது. (பல காலமாக அச்சிடப்பட்டு வரும் இந்தப் புத்தகத்தின் புதிய பதிப்புகளில் தான் இந்த வசனம் அச்சிடப்படுகிறது. இதற்கு முன்பு இப்படி அச்சிடப்படவில்லை). 

(விசுவாசிகளே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும், மெதுவான குரலிலும் உங்கள் இரட்சகனிடமே (உங்கள் தேவையைக் கோரிப்) பிரார்தியுங்கள். (அல் குர்ஆன் 7-55)

மன்ஸிலை புனித நூலாக நினைக்கும் கூட்டத்தார் தொழுகை முடிந்ததும் கூட்டு துஆ என்றொன்றை ஓதுவார்கள் அது மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியமாகும். ஆனால் பிரார்த்தனை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் பிரச்சாரம் செய்யும் போதும் இந்த வசனத்தைத் தான் ஆதாரம் காட்டுவோம். இறைவனை தாழ்மையாகவும் அமைதியாகவும் பிரார்த்திக்க வேண்டும். என்பதும் கூட்டு துஆ போன்றவைகள் வழிகேடுகள் என்பதற்கும் மேற்கண்ட வசனமே போதிய ஆதாரமாகும்.

மேற்கண்ட திருமறை வசனத்திற்கு அடுத்ததாக “மன்ஜில் ஓதவதின் பலன்கள்” என்ற ஒரு தலைப்பிடப்பட்டு இந்த புத்தகத்தை ஓதுவதினால் என்ன நன்மை ஏற்படும் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள். அதைப் பற்றிய விபரத்தை பார்ப்போம்.

மன்ஜில் ஓதுவதின் பலன்கள்.

இந்த மன்ஜில் கண்ணேறு, சூனியம், பைத்தியம், ஷைத்தான், விலங்குகள், திருடர்கள் பயம், தீராத உடல் மற்றும் மன வியாதி, மனக் குழப்பம், திடுக்கம் மற்றும் எல்லா முஸீபத்துகளில் இருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற ஹஜ்ரத் ஷைகுல் ஹதீஸ் முஹம்மது ஜக்கரிய்யா ஸாஹிப் அவர்களும், அவருடைய குடும்பப் பெரியார்களும் அமல் செய்து பலன் கண்ட அருமருந்தாகவும், அற்புத நோய் நிவாரணியாகவும், அனுபவப்புர்வமான அமலாகவும் இருக்கிறது.
அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி மன ஓர்மையுடன்  அன்றாடம் ஓதி வருவதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு அளப்பரிய நன்மைகள் இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.

மேற்கண்ட விளக்கம்? மன்ஸிலின் முதல் பக்கத்திலேயே அடங்கியிருக்கிறது.

நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விடயம் என்னவென்றால் மன்ஜில் என்ற இந்த நூலில் அடங்கியுள்ள செய்திகள் மூலம் மேற்கண்ட பயன்கள் கிடைக்கும் என்று திருமறைக் குர்ஆனோ நபியவர்களின் வழிகாட்டுதல்களோ எந்த இடத்திலும் சொல்லவே இல்லை.

ஜக்கரிய்யா ஸாஹிப் என்பவரும் அவருடைய குடும்பப் பெரியார்களும் அமல் செய்து பலன் கண்டதாகத் தான் மேற்கண்ட செய்தி சொல்கிறதே தவிர நபியவர்கள் செய்ததாகவோ அல்லது செய்யச் சொன்னதாகவோ எங்கும் இல்லை.

இந்த ஒரு அடிப்படையே மன்ஸிலுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்பதற்கான போதுமான சான்றாகும்.

குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்ளை மாத்திரமே பின்பற்ற வேண்டும்.

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்..(திருக்குர்ஆன் : 20:122, 123, 124)

'அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (திருக்குர்ஆன் : 2:170)

(முஹம்மதே!) உமது இறை வனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (திருக்குர்ஆன் : 6:106)

தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்? அவனே இவ்வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் 'இது உமது இறைவனிடமிருந்து உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது' என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர்!

உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந் துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் : 6:114,115)

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (திருக்குர்ஆன் : 7:3)

மேற்கண்ட வசனங்கள் குர்ஆன் மற்றும் நபியவர்களின் சுன்னாவை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன. அப்படியிருக்கையில் ஜக்கரிய்யா ஸாஹிபும் அவருடைய குடும்பப் பெரியார்களும் ஓதியதாக வரும் இந்த மன்ஸிலை நாம் ஓத வேண்டிய எந்தத் தேவையும் நமக்கு கிடையாது.

அத்துடன் மன்ஸிலில் உள்ளவற்றை ஜக்கரிய்யா ஸாஹிப் சொல்வதைப் போல் ஓதி வரவேண்டும் என்றால் அந்த நல்ல நடை முறையை நபியவர்களே நமக்குக் காட்டித் தந்திருப்பார்கள். நபியவர்கள் காட்டித் தரவில்லை என்றிருக்கும் போது இஸ்லாத்திற்கும் மன்ஸில் என்று கூறி தாங்களாக மார்க்கத்தில் இல்லாத சிறப்புகளை சேர்ப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

பொதுவாக திருமறைக் குர்ஆனில் உள்ள அத்தியாயங்களை எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஓதிக்கொள்ள முடியும் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாகும்.

"யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. "அலிஃப் லாம் மீம்என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் ஒரு எழுத்துலாம் ஒரு எழுத்துமீம் ஒரு எழுத்து''என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: திர்மிதீ (2835)

மேற்கண்ட நபியவர்களின் வார்த்தையின்படி திருமறைக் குர்ஆனை நன்மையை நாடி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் ஓத முடியும், ஆனால் திருமறையின் அத்தியாயங்களுக்கு நபியவர்களோ அல்லாஹ்வோ சொல்லித்தராத சிறப்புகளை நாமாக உருவாக்கக் கூடாது.

மன்ஸிலின் சிறப்பு பற்றிய ஹதீஸின் தரத்தைப் பற்றி அடுத்த தொடரில் ஆராய்வோம் இன்ஷா அல்லாஹ்…..

2 comments:

  1. ஷைகுல் ஹதீஸின் வரையறைகளை சற்று விளக்க முடியுமா சகோ

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ்…..

    மன்ஸிலின் சிறப்பு பற்றிய ஹதீஸின் தரத்தைப் பற்றி அடுத்த தொடரி ??????

    ReplyDelete