Saturday, 19 May 2012

அரசு மருத்துவமனைகளே இப்படித்தான், பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்!

உணர்வு (குரல் 16 : 35) இதழில் இடம் பெற்றிருந்த ‘அரசு மருத்துவமனையின் அலட்சியம்’ என்ற செய்தி பார்த்தேன். அதில் ஒரு குழந்தைக்கு சென்னை எழும்பூர் அரசு மருத்துவ மனையில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையும், மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழந்தையின் பெற்றோரை அவமானப்படுத்திய செய்தியையும் பார்த்தேன். இது போன்ற அனுபவம் எனது மகளுக்கும் இதே மருத்துவமனையில் ஏற்பட்டது. எனது 12 வயது மகள் ராபியாவை இந்த மருத்துவமனையில் டைஃபாய்டு என்று கடந்த ஆண்டு சேர்த்தேன். நாங்கள் படப்பையில் வசித்து வருகின்றோம்.

படப்பைக்கும், எழும்பூருக்கும் அடிக்கடி குடும்பத்தினருடன் பயணித்த போக்குவரத்துக் கட்டணத்தைக் கணக்கிட்டால், நல்ல தனியார் மருத்துவமனையிலேயே சேர்த்திருக்கலாம். இவ்வளவு செலவுக்கும் சிரமத்திற்கும் மத்தியில் சேர்க்கப்பட்ட எனது மகளை அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் ஊழியர்களும் சரியாக கவனிக்காமல் அலைக்கழித்தனர். ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாததற்கு ஏன் பதறுகிறீர்கள் என்ற ரீதியில் விரட்டியடித்தனர். எனவே வேறு வழியின்றி எனது மகளை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்க நேர்ந்தது. அவர்கள் குழந்தையின் உடல்நிலையைப் பார்த்துவிட்டு அலட்சியம் காட்டிய அரசு மருத்துவமனையை கண்டித்தனர்.
பின்னர் வட சென்னை டிஎன்டிஜே களமிறங்கி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை வட்டாரத்தில் பேசி மறுபடியும் எனது மகளை அங்கு அட்மிட் செய்தனர். பொதுவாக பாமர மக்கள் யாரும் இந்த மருத்துவ மனைக்கு வந்துவிட்டால் அவர்கள் கடும் சிரமத்திற்கும் அலைக்கழிப்பிற்கும் ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. அரசு மருத்துவமனையில் நடக்கும் அலட்சியங்களுக்காக டிஎன்டிஜே போன்ற அமைப்புகள் களமிறங்கித்தான் நியாயம் கிடைக்க வேண்டுமென்றால், அதிகாரிகளும் அமைச்சர்களும் எதற்கு இருக்கிறார்கள் என்ற கேள்விதான் எழுகிறது.
நமது அமைப்பின் செயல்பாடுகளையும், நியாயத்திற்காக குரல் கொடுக்கும் அதன் வீரியத்தையும் கவனித்து வந்த எழும்பூர் மருத்துவ மனையின் செவிலியர் ஒருவர் இப்போது பார்த்தாலும் எனது மகளின் நலம் விசாரிக்கிறார் என்பது தனிக்கதை. வாரம் ஒரு முறையாவது திடீர் விசிட் செய்து அரசு மருத்துவமனைகளில் நடக்கும் மெத்தனப்போக்கை நேரடியாக கவனித்து, அலட்சியம் காட்டும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் குரலாக இருக்கிறது.
தகவல்- முகம்மது முசீர், படப்பை

No comments:

Post a Comment