கேள்வி : madavidai kalam mudintha piragu kulippadu eppadi. vilaakamaga kooravum...
fathima muzniya – usa
பதில் ; மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மாத விடாய்க் காலம் முடிகின்ற வரை தொழக் கூடாது. மாதவிடாய் காலம் முடிந்ததின் பின்னர் குளித்துவிட்டு தொழுது கொள்ள முடியும்.
மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டு தொழுதுகொள்!'' என்றார்கள்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (228)
குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள். (அல்குர்ஆன் (4 : 43))
குளிப்பை நிறைவேற்றும் முறை
நிய்யத் என்ற பெயரில் குளிப்புக்காக பெண்கள் நவைத்து அனிஃதஸல குஸ்லன் மினல் ஹைலி வதஹாரத்தன் லில் பதனி வ இஸ்திஹ்பாபன் லிஸ்ஸலாத்தி என்ற வார்த்தைகளை சொல்கிறார்கள். இதைச் சொல்லிக் குளித்தால் தான் குளிப்பு நிறைவேறும் என்றும் எண்ணுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை.
குளிக்கும் போது சில வாசகங்களை கூற வேண்டும் என்றும் ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் என்றும் பலவிதமான நடைமுறைகள் சில ஊர்களில் உள்ளன. இதற்கும் நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று சொன்னார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (552)
மாதவிடாய் குளியல் குளிக்கும் போது தண்ணீரோடு இலந்தை இலையை சேர்த்துக் குளிக்கும் படி சொல்கிறார்கள். இலந்தை இலை என்பது தூய்மையை வலியுறுத்தி சொல்லப்படுவதாகும். நாம் வாழும் தற்காலத்தில் இலந்தை இலைக்கு பதிலாக சவர்க்காரத்தை (சோப்) பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பின்னர் தலையின் அனைத்துப் பகுதிகளும் நனையும் வண்ணம் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். அதன் பின்னர் உடம்புக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். இறுதியாக கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டொன்ரை எடுத்து சுத்தம் செய்யும்படி நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கஸ்தூரி என்பதும் வாசனைக்காக சொல்லப்பட்டதுதான் அதனால் கஸ்தூரி கிடைக்காதவர்கள் அதற்கு பதிலாக அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சடைபோட்டுள்ள பெண்கள் சடையை அவிழ்க்க வேண்டியதில்லை.
சடைபோட்டுள்ள பெண்மணிகள் அதை அவிழ்த்துத் தான் குளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அல்லாஹ்வின் தூதரே நான் அதிகம் சடையுடைய பெண்ணாக இருக்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை நான் அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு தேவையில்லை. உன் தலைக்கு இரு கையளவு தண்ணீரை எடுத்து மூன்று முறை உன் தலையில் ஊற்றிக் கொள். பின்னர் உன் (உடல்) மீது ஊற்றிக்கொள். நீ தூய்மையடைந்து விடுவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல் : முஸ்லிம் (497)
மேற்கண்ட முறையைப் பேணி குளிப்பதுதான் நபி வழியாகும்.
பதில் : ரஸ்மின் MISc
No comments:
Post a Comment