Thursday, 28 July 2011


தோழ்வி! வீழ்வதற்கல்ல வாழ்வதற்கே!
(வாருங்கள் சாதிக்களாம்)
Mehboob shaik D.E.C.E
என்னால் இனிமேல் முடியாது, அதைப் பற்றிப் பேசாதீர்கள், கேட்டாலே எரிச்சலாக உள்ளது, இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன், என் வாழ்கை அவ்வளவு தான் இது போன்ற வார்த்தைகளை பேசுபவர்களை நாம் அடிக்கடி நமது வாழ்வில் சந்திப்பதுண்டு. காரணம் கேட்டால் தோற்று விட்டேன் என்பார்கள்.

தோழ்வியை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத காரணத்தினால் வெளியாகும் வார்த்தைகள் தாம் அவை. வாழ்க்கை என்றால் தோழ்வி என்றொன்று இல்லாமல் பயணிக்க வேண்டும் என்ற அதீத ஆசை நம் ஆழ் மனதில் வேரூன்றி இருப்பதுதான் அதற்கான காரணம்.

பாதை என்றால் வலைவுகள் இருக்கத்தான் செய்யும் வலைவுகள் இல்லாமல் எங்கும் திரும்பாமலேயே நான் பயணிக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி அறிவுடமையாகும்.

ஓடுகின்ற நதியினைப் பற்றி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். எங்கோ ஒரு மலையில் ஆரம்பிக்கிறது. பல பள்ளங்களைத் தாண்டி, எத்தனையோ இடத்தில் வீழ்ந்து, கற்பாரைகளை தனதாக்கிக் கொண்டுதான் இறுதியில் கடலோடு சங்கமித்து அமைதியாகின்றது.

பள்ளத்தில் விழாமல் ஆறு உருவாக முடியுமா?

பக்குவப் படாமல் வெற்றியை நமதாக்க முடியுமா?

தோழ்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் போவதற்குறிய முக்கிய காரணம் என்ன தெரியுமா? நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிப்பதில்லை. அடுத்தவர்களுக்கு அந்த அதிகாரத்தை நீங்கள் கொடுத்துவிடுவதினால் தான் நீங்கள் பிரச்சினைப் படவேண்டியுள்ளது.

ஒரு காரியத்தை வெல்வதற்கான முயற்சி, இலக்கு, குறிக்கோல் அனைத்தும் உங்களுடையதாக இருக்கும் போது அதன் முடிவை மாத்திரம் மற்றவர்கள் தீர்மானிப்பதற்கு ஏன் விடவேண்டும்?

வெற்றி, தோழ்வி இரண்டும் அடுத்தவர்கள் பார்வையாகத் தான் இருக்கிறது. ஒரு விளையாட்டில் இந்த வருடம் நீங்கள் ஜெயித்தால் அதனை வெற்றி என்று கொண்டாடுபவர்கள் ஒரு வேலை அடுத்த வருடம் நீங்கள் அந்த விளையாட்டில் ஜெயிக்க முடியாமல் போனால் அதனை தோழ்வி என்று வர்ணிப்பார்கள்.

ஆனால் இவை இரண்டையும் இரு சம்வங்களாக நினைத்தீர்கள் என்றால் இந்தப் பிரச்சினை உருவாகாது.

நீங்கள் செய்த முயற்சி போதுமானதாக இருந்தால் நீங்கள் ஜெயித்தீர்கள் என்று ஊர் பேசும், முயற்சி போதாவிட்டால் தோழ்வி என்று பேசுவார்கள் ஆக மொத்தத்தில் முயற்சியின் ஏற்ற இரக்கத்தின் வெளிப்பாடுதான் வெற்றி, தோழ்வி என்று பிரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் போதுமானதாகும்.

“வெற்றி என்பது அடுத்தவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்கானது” என்ற எண்ணத்தில் இருந்து நாம் விடுபடாத வரையில் தோழ்விகளின் ரனத்தில் இருந்து உங்களை நீங்கள் மீட்டுக் கொள்ளவே முடியாது.

நாம் ஆசைப்படும் விஷயத்தில் வெற்றி பெற முடியாது என்பதில்லை இறைவன் நாடினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். ஆனால் அதற்கான நமது உழைப்பு சரியாக இருக்க வேண்டும்.

நூறு சதவீதம் உழைத்தால் கிடைக்கும் வெற்றியை வெறும் இருபத்தி ஐந்து சதவீத உழைப்பினால் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எப்படி சாத்தியமாகும்.

“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டானாம்” என்ற கதையைப் போல் ஆகிவிடாதா?

நமது உழைப்பின் போதாக் குறையை உணர முடியாத காரணத்தினால், தோற்று விட்டோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடுகிறோம்.

உலகில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களின் வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் அவர்களின் உழைப்பின் வேகவும், விவேகமும் நமக்கு அழகாகத் தென்படும்.


உலக வரலாற்றில் மக்கள் மனங்களில் இடம் பிடித்த 100 பேர்களின் வரலாற்றைத் தொகுத்த மைக்கல் ஹெச் ஹாட் என்பவர் நுறு பேரில் முதல் இடத்தை நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கினார். ஏன் தெரியுமா?


வரலாற்றில் வெற்றி பெற்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம் வரலாற்றையே வென்றவர் என்று ஒருவருக்கு பெயர் சொல்வதன்றால் அது நபி முஹம்மத் (ஸல்) அவர்களாகத்தான் இருக்க முடியும்.

ஏன் தெரியுமா?

நபியவர்களைப் போல் இந்த உலகில் மிகப் பெரும் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை. காரணம். வெற்றி, தோழ்வி இரண்டையும் ஒரு சம நிலைபாட்டில் நபியவர்கள் வைத்துப் பார்த்தார்கள்.

வெற்றி கிடைத்தாலும் அது இறைவன் மூலம் கிடைத்தது. தோழ்வி என்றாலும் அது இறைவனின் ஏற்பாட்டில் நடந்தது. ஆனால் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

வெற்றி கிடைத்தால் சந்தோஷத்திற்கு அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே!) என்று புகழ்ந்த நபியவர்கள். தோழ்வி கிடைத்தால் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். என்றும் கூறி இறைவன் பக்கமே இரண்டையும் ஒப்படைத்துவிட்டு தனது முயற்சியில் கவணம் செலுத்தினார்கள்.

தோற்றுவிட்டால் நம்மால் முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால் "உஹதுப்" போருக்குப் பின் நடந்த போர்களில் வெற்றி பெருவதை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.

சுமார் 318 க்குற்பட்ட படை வீரர்களுடன் போய் “பத்ர்”  யுத்தத்தில் நபியவர்கள் ஜெயித்ததின் மர்மம் என்ன? இறைவனின் உதவி கிடைத்தது நபியவர்களின் சரியான திட்டமிடலும் இருந்தது அதுவே அந்த வெற்றிக்கான காரணம்.

நாம் தோற்கிறோம் என்பதினால் வீழ்கிறோம் என்று அர்த்தமல்ல! மீண்டும் சரியாக எழுவோம் என்பதே அர்த்தம்.

குழந்தை விழுவதினால் தான் சரியாக நடக்கக் கற்றுக் கொள்கிறது. விழாமலேயே நடக்கக் கற்றுக் கொண்டவர்கள் யார்?
............................................................................................................


.............................................................................................................

இந்திய வரலாற்றில் கஜினி முகம்மது என்பவரைப் பற்றிப் பேசும் போது அவர் 17 முறை போர் தொடுத்து 16 முறை தோற்றதாகவும், 17வது முறைதான் ஜெயித்ததாகவும் வரலாறு சொல்கிறது.

16 முறை தோற்ற கஜினி முஹம்மது “நமக்கு வாய்த்தது அவ்வளவு தான்” ,  “எல்லாம் போச்சு” ,  “என்னால் இனிமேல் முடியாது”, “அதைப் பற்றிப் பேசாதீர்கள்”, “கேட்டாலே எரிச்சலாக உள்ளது”, “இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்”, “என் வாழ்கை அவ்வளவு தான்” என்று நாம் சொல்வதைப் போன்று சொல்லியிருந்தால் 17வது முறை ஜெயித்திருக்க முடியுமா என்ன?

உண்மையில் கஜினி முஹம்மது 16 தடவைகள் தோற்கவில்லை. முயற்சி செய்தார் நடக்கவில்லை. இறைவனின் நாட்டம் 16 தடவைகள் முயற்சி செய்து 17வது தடவை வெற்றி பெற்றார்.

இப்படி ஏன் நமது வாழ்வின் தோழ்வி என்று நாம் எண்ணும் விஷயங்களை நம்மால் மாற்றிக் கொள்ள முடிவதில்லை?

நமக்கு கிடைத்தது இவ்வளவுதான் என்று வாழ்வதென்றால் அந்த வாழ்வில் என்ன சுவாரஷ்யம் இருக்கிறது? 


வியர்க்காமல், மோதாமல், குட்டுப்படாமல், திட்டு வாங்காமல், கை கால்களில் அடிபடாமல் வாழ்க்கை நடந்தால் வாழ்வில் என்ன இன்பம் இருக்கும்? எல்லாம் ஒரு திட்டமிடலின் படிதான் இயங்குகின்றது?

“விரும்பியது கிடைக்கவில்லை இனிமேல் வாழ்ந்து என்ன பயன்?” என்ற கேள்வியுடன் பயணிப்பதில் என்ன நன்மை விளையப் போகிறது?

நாம் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அது நல்லதுக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதன்மையாக நமக்கு வேண்டும். அடுத்தவர் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் தோழ்வியை சகித்துக் கொள்ள முடியாமல் போய்விடும்.

உலகில் சாதனை படைத்தவர்களை பற்றிப் படித்துப் பாருங்கள் அவர்கள்;  தாம் அடுத்தவர்களால் போற்றப்பட வேண்டும் என்பதற்காக அவற்றை செய்யவில்லை அப்படி செய்திருந்தால் அவர்களினால் வெற்றியை நுகர்ந்திருக்க முடியாது.

நாம் செய்யும் காரியத்தில் சரியான ஈடுபாடு காட்டினால் (இறைவன் நாடினால்) நமது முன்னேற்றத்திற்கான வாயில் கதவை நாமே திறக்க முடியும்.

உலகின் பார்வையில் தோற்றவர்கள் அனைவரும் தமது தோழ்வியை, தோழ்வியாக உணரவில்லை. வெற்றிக்கு அருகில் இருப்பதாகத் தான் உணர்ந்தார்கள் அதனால் தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது.


நமது வெற்றியை நோக்கிய பயணத்தில் நம் சிந்தனை நம்முடைய மூலையுடன் தொடர்புடையதாகவே இருக்க வேண்டும் அடுத்தவர் மூலையைப் பற்றி நாம் சிந்தித்தால் நமது மூலையை எந்த மூளையில் வைப்பது?

சிலரை நீங்களே பார்க்களாம், “அவனைப் போல் மூலையும், ஆற்றலும் எனக்கிருந்திருந்தால்”என்று எதையெடுத்தாலும் சொல்லுவார்கள். அவனைப் போல் மூலையும், ஆற்றலும் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது ஒரு புரம் இருக்கட்டும். உங்களுக்கிருந்த மூலையை வைத்து என்ன சாதித்தீர்கள்?

இன்னும் சிலர், ஏதாவது பிரச்சினைகளுக்குறிய தீர்வைத் தேடும் போது, “இதற்கெல்லாம் அவர் இருக்க வேண்டும். கலக்கியிருப்பார்”  என்பார்கள். அவர் இருந்தால் கலக்கியிருப்பார், பிரச்சினையை சரியான முறையில் தீர்த்து வைத்திருப்பார் என்பது ஒருபுறமிருக்கட்டும். நீங்கள் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி உங்கள் சிந்தனையை எந்தளவுக்குப் பயன்படுத்தினீர்கள்?

இப்படி அடுத்தவர்களின் சிந்தனை, ஆற்றல், முயற்சிகளைப் பற்றி சிந்திப்பதில் காலம் கடத்துவதை விடுத்து அந்நேரத்தில் நமது சிந்தனையைப் பயன்படுத்தி நாம் ஒரு முடிவை எடுக்க முயலும் போது வெற்றி நம்முடையதாகிறதல்லவா?

யோசியுங்கள், யோசியுங்கள் நீங்களும் அறிவாளிதான்..............

நம்முடைய வெற்றி என்பது எதில் இருக்கிறது? என்று பேரறிஞர் தனிஸ்லாஸ் ஒரு கூட்டத்தில் வைத்துக் கேட்டார். விதவிதமான பதில்கள் வந்து குவிந்தன.

நிறைய பணம் சம்பாதிப்பது, சொந்தமாக ஒரு வீடு கட்டி அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்வது, குறைந்தது பத்துப் பேருக்காவது நாம் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறுவது, நம்மை இகழ்ந்து பேசியவர்கள் வியக்கும் அளவுக்கு வாழ்க்கைப் பயணத்தில் உயர்ந்து வளர்வது இப்படி ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள்.

பேரறிஞர் தனிஸ்லாஸ் அமைதியாக பதில் தந்தார். “நமது வெற்றி என்பது அடுத்தவர்களின் தோழ்வியில் உள்ளது”

ஆம் நாம் ஒரு போட்டியில் முதலாவது ஆளாக வரவேண்டும் என்றால் கண்டிப்பாக யாரோ ஒருவர் இரண்டாம் ஆளாக பின்தங்க வேண்டும். பின் தங்கும் அளவில் முயற்சியில் குறை உள்ள ஒருவர் இல்லாமல் நாம் எப்படி முதலாம் இடத்தைப் பிடிப்பது?

வெற்றியை ஒரு கொண்டாட்டமாக நாம் நினைப்பதினால் தான் நமது வெற்றி அடுத்தவர்களின் தோழ்வியில் இருக்கிறது என்ற விடை பிறக்கிறது. வெற்றியும், தோழ்வியும் இரு வேறு சம்பவங்கள் என்ற எண்ணம் நம்மில் உருவாகுமானால் “ நமது வெற்றி நமது முயற்சியில் உள்ளது” என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்வோம்.

நாம் தோழ்வியைக் கண்டு துவண்டு போவதற்கான காரணம் வெற்றியைக் கொண்டாடுவது, வெற்றியைக் கொண்டாடும் யாரும் தோழ்வியைக் கொண்டாடுவதில்லையே?

தோழ்வி என்பது தோழ்வியே அல்ல உங்கள் முயற்றி சரியாக உள்ள வரை.


தோழ்வியை சகித்துக் கொள்ள முடியாமல் போவதற்கான முக்கிய காரணங்களில் இறை நம்பிக்கையின்மை முதன்மை இடத்தைப் பெருகிறது.
கடந்த ஆண்டு உலகமே பயப்பட்ட விபரீதம் பற்றிய செய்தி உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலகப் பொருளாதார வீழ்ச்சி(World economic collapse) பொருளாதார ஜாம்பவான்களாக அறியப்பட்ட பல நாடுகள் நடுத்தெருவுக்கு வந்துவிடுமோ என்று பலரும் பயந்தார்கள்.

அமெரிக்காவின் 80 க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாகிப் போயின.

ஆஸ்த்திரேலியாவின் 50க்கும் மேற்பட்ட வங்கிகள் இந்நிலையைச் சந்தித்தன.

ஐரோப்பா முழுவதும் ஆட்டம் கண்டது.

இந்தியாவின் ஐ.டி துறை (Information Technology Department)அடிமட்டத்திற்கு சென்றுவிடுமோ என்றளவுக்கு அஞ்சப்பட்டது. பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்பின்மை, இருந்த வேலையும் பலருக்கு பரிபோனது இப்படி வாழ்வின் கடைசி நிலைக்கு நாம் சென்றுவிட்டோம் என்ற பலரும் எண்ணும் அளவுக்கு உலகம் ஒரு பெரும் விபரீதத்தை உணர்ந்தது.

இந்த விபரீதத்தின் விளைவு பல உயிர்கள் உடலை விட்டு செயற்கையாக நீக்கப்பட்டன. ஆம் தற்கொலையில் போய் முடிந்தது.

தோழ்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை, இழப்பை ஏற்றுக் கொள்ளத் தெரியவில்லை, முடியாமல் போன காரியத்தினால் மனமுடைந்தவர்கள் இறுதியில் உயிர் நீத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இதுதான் தோழ்வி தரும் பாடமா? இல்லையே!

தோழ்வியை வெல்வதற்குத் தெரிந்தவன் தான் உண்மையில் வெற்றி பெற முடியும் என்பதை மனதில் ஆழமாக பதித்துக் கொள்ளுங்கள்.

இறைவனின் அழகிய வழிகாட்டுதலை நாம் அறிந்திருந்தால் இந்தப் பிரச்சினை யாருக்கும் ஏற்படாது. தோழ்வி பயம் தொலைந்து போய் விடும்.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான் (57:23)

இஸ்லாம் விதியைப் பற்றிக் குறிப்பிடுவதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.

நமக்குக் கிடைக்க வேண்டிய ஒன்று கிடைக்காமல் போனதற்காக நாம் கவலைப் படாமல் இருப்பதற்கு விதி பற்றிய நம்பிக்கை நமக்குத் துணையாக இருக்கிறது.

இதே நேரத்தில் நமக்கு கிடைக்கும் வெற்றிகளின் போது நாம் பூரித்துப் போய் விடாமல் இருப்பதற்கும் இந்த விதி பற்றிய தூய நம்பிக்கை துணை நிற்கிறது.

ஒரு மனிதன் தனது முழு முயற்சியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தை செய்கிறான். அது கைகூடவில்லை என்று வைத்துக்கொள்வோம். விதியை நம்புகிறவன் நாம் என்ன முயற்சி செய்தாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா என நினைத்து உடனேயே சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறான்.

அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக்கொள்வோம். இவ்வளவு பாடுபட்டும் கைக்கூடவில்லையே என்று புலம்பியே வாழ்க்கையை அழித்துவிடுவான்.

துன்பங்களைக் கண்டு துவண்டு போகாமல் தடுக்கும் கேடயமே விதி.

"விதியை நம்பி முடங்கிக்கிட" என்று மற்ற மதங்கள் கூறுவது போன்று இஸ்லாம் கூறவில்லை. மனித முன்னேற்றத்திற்கு எந்தத் தடங்களும் ஏற்படாத வகையில்தான் விதியை நம்புமாறு இஸ்லாம் கூறுகிறது.

இந்த நிமிடம் வரை என்ன நடந்துவிட்டதோ அதுதான் நமது விதி என்று நமக்குத் தெரியும். அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது தெரியாததால் எதிர்கால விதி நமக்குத் தெரியாது.

எது நடந்து முடிந்துவிட்டதோ விதி இன்னதென்று தெரிந்துவிட்டதோ விதியை நம்பி ஆறுதல் படு. எது நடக்கவில்லையோ அதில் நீயாக திட்டமிட்டு செயற்படு என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்றார்கள்.

அப்போது மக்களில் ஒருவர் அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், தீயோர்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு (இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம் எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்- அலீ(ரலி), (நூல் - புகாரி 6605)

இறைவனை நம்பி, அவனுடைய ஏற்பாட்டில் தான் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன என்பதை ஒருவர் ஏற்றுக் கொண்டாலே தோழ்வி பயம் தானாக இல்லாமல் போய்விடும்.

 ....................................................................................................................................

தோழ்வியை நினைத்து நினைத்து தொடர்ந்து தோற்றுக் போவதை விட“தோழ்வி வீழ்வதற்கல்ல வாழ்வதற்குத் தான்” என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்.

இனிமேல் உங்கள் வாழ்வில் தோழ்வியும் வெற்றிதான்.

.......................................................................................................................................


சகோதரர்களே! ரமழானிடம் ஜெயிக்க வேண்டாமா?


வருடத்திற்கு ஒரு ரமழான் வருகிறது. முப்பது நாட்கள் நோன்பு வைக்கிறோம். இறுதியாக ஒரு பெருநாள் தொழுகை. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன வேலை? என்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவர்கள் நிறையப் பேர் நம்மிலே உள்ளார்கள். இதற்குக் காரணம் என்னவெனில் ரமழானின் முக்கியத்துவம் தெரியவில்லை, ரமழானை நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை.

ஆம் சகோதரர்களே! ரமழானிடம் நாம் ஜெயிக்க வெண்டாமா?

ஒவ்வொரு வருடமும் நம்மைத் தாண்டி செல்லும் புனித மிக்க ரமழானை நாம் சரியாகப் பயன்படுத்துவதே ரமழானை நாம் ஜெயித்துவிட்டோம் என்பதற்கான சரியான பதிலாக இருக்க முடியும்.

பொதுவாக ரமழானில் நாம் செய்யும் காரியங்களை பட்டியல் போட்டுப் பாருங்கள். என்னெவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஸஹர் உணவை நேர காலத்தோடு உண்டுவிட்டு அவசர அவசரமாக சென்று படுத்துறங்குகிறோம். அப்படியானால் சுப்ஹுத் தொழுகை ? அதன் கதி அதோ கதி தான்.

காலை பத்து மணிக்கு மேல் எழும்பி அதன் பின்னர் நம்முடைய மற்ற காரியங்களை செய்ய ஆரம்பிக்கிறோம் பெரும் பாலும் லுஹர், அசர், மஃரிப், இஷாவுடன் சேர்த்து இரவுத் தொழுகை என்று மற்ற தொழுகைகளை எப்படியோ தொழுது விடுகிறோம்.

அதிலும் சிலருக்கு லுஹர் தொழுகை உண்டு அதன் பின் ஒரு தூக்கம் போட்டால் அசர் இல்லை. நோன்பு திறப்பதற்குத் தான் கண் விழிப்பார்கள்.

இஷா தொழுகையுடன் சேர்த்து இரவுத் தொழுகையையும் தொழுதுவிட்டு நிம்மதியாக கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் தூக்கத்தில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும் ஆனால் பெரும்பாலானவர்களின் நிலை அதுவன்று.

ரமழான் காலம் என்றால் இரவு முழுவதும் கூத்தும் கும்மாலமும் நிறைந்திருக்கும் பகல் முழுவதும் ஊரே அடங்கிப் போகும் அளவுக்கு தூக்கத்தில் மூழ்கியிருக்கும்.

இன்னும் சிலரின் பகல் நேர இரவு நேர வேலையாக, பொழுது போக்கும் காரியமாக தொலைக்காட்டி பார்த்தல் தான் அமைந்திருக்கும்.

இனி எப்படி நாம் ரமழானை ஜெயிப்பது ?

ரமழானை ஜெயிப்பதற்கான சில அறிவுரைகள்.

புனிதமிக்க ரமழான் மாதத்தை ஜெயித்து மறுமையில் வெற்றி பெறுவதற்காக ரமழானை நாம் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சில செய்திகளை இங்கு குறிப்பிடுகிறோம்.

ரமழான் பற்றி குடும்பத்தினருடன் ஆலோசனை செய்யுங்கள்.

முதலாவதாக நாம் எதிர் நோக்க இருக்கும் ரமழான் மாதம் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு ஆலோசனை செய்யுங்கள். ரமழான் மாதத்தை பிரயோஜனமானதாக கழிப்பதற்குறிய கருத்துக்களை அவர்களிடம் இருந்து எதிர்பாருங்கள்.

உங்கள் கணவர், பிள்ளைகள், தாய், தந்தை, உங்கள் கணவரின் தாய், தந்தை, உங்கள் தம்பி, தங்கைள் என்று அனைவரையும் ஒன்று கூட்டிக் கூட இந்த ஆலோசனையை நீங்கள் செய்யலாம். ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவிக்கும் போது அதில் சிறந்த கருத்துக்களை தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் ரமழான் மாதத்தின் செயல்பாடுகளை நீங்கள் அமைத்துக் கொள்ள முடியும்.

தொழுகையை சரியாகப் பேணுதல்.

ரமழான் காலம் என்பது நமது வாழ்வை சரியாக அமைத்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சிக் களமாகும் அந்த பயிற்சிக் காலத்தை சரியாக நாம் பயன்படுத்த முனைய வேண்டும்.

அந்த அடிப்படையில் தொழுகையை சரியாக பேணுவதற்கு நாம் நம்மை பழக்கிக் கொள்வதற்கு ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைவது இந்த ரமழானுடைய காலம் சரியான நேரத்தில் ஜமாத்துடன் சேர்ந்து நாம் தொழுவதால் நமது வாழ்வை சரியாக வழப்படுத்திக்கொள்ள அது பெரிதும் உதவியாக இருக்கும்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, "மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினோம். அப்போது "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, "மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று சொன்னோம். அப்போது, "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, "மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள்'' என்று சொன்னோம். அப்போது "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ், நூல்: புகாரி 687

தனக்கு எழுந்து நிற்கவே முடியாது என்ற நிலை இருந்தும் நபியவர்கள் தொழுகையை விடுவதற்க விரும்பவில்லை. ஏன் என்றால் தொழுகை என்பது அவ்வளவு முக்கியமான ஒரு செயல். அதனால் தான் நபியவர்கள் இவ்வளவு கஷ்டம் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

நாமும் இந்த ரமழான் காலத்தை தொழுகையை சரியாக அமைத்துக்கொள்ளக் கூடிய பயிற்சிக் களமாக மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.

குர்ஆன் ஓதுதல்.

திருமறைக் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மிக்க மாதமாக  இந்த ரமழான் மாதம் தான் இருக்கிறது. இம்மாதத்தில் அதிகமதிகம் நாம் குர்ஆனை ஓத வேண்டும்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)

நமது வீடுகளில் திருமறைக் குர்ஆனை ஓதுவதின் மூலமாக நமது பிள்ளைகளும் அதைப் பார்த்து பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக அது மாறிவிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை,ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1430

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான். அந்த ஏட்டிலிருந்து இரண்டு வசனங்களை அருளினான். அந்த இரண்டைக் கொண்டு சூரத்துல் பகராவை முடித்தான். மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அவ்வீட்டை நெருங்கியே தீருவான்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதி 2807

ரமழான் மாதத்தில் ஆண், பெண் என்று அனைவருக்கும அதிகமான நேரங்கள் கிடைப்பதால் அந்த நேரத்தை திருமறைக் குர்ஆனை ஓதுவதின் மூலம் பிரயோஜனப் படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு “ஜுஸ்வு” ஓதினால் முப்பது நாட்களில் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்த நன்மையை நாம் பெற்றுவிட முடியும்.
அதே போல் குர்ஆனை ஒதுவதுடன் இணைத்து அதன் மொழி பெயர்பையும் படிக்கும் போது திருமறையில் உள்ளார்ந்த, உயரிய கருத்துக்களை நாம் நமது வாழ்வில் நடை முறைப்படுத்துவதற்கு வசதியாக அது அமையும்.

அண்டை வீட்டாரை கவணித்தல்.

ரமழான் மாதம் என்பது அனைவரையும் அரவணைக்கும் ஓர் உண்ணத மாதமாகும். அம்மாததில் நாம் நம்முடைய அண்டை வீட்டாருடன் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் நடக்க முயற்சிக்க வேண்டும். ஏன் என்றால் பொருமையின் மாதத்தில் நாம் நமது அண்டை வீட்டாருடன் சரியான முறையில் வாழ்ந்து பழகும் போது அது மற்ற மாதங்களிலும் நாம் சரியாக இருப்பதற்கு ஒரு அடிப்படையாக அமைந்து விடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 73 

நம் மூலமாக நமது அண்டை வீட்டாருக்கு எந்த ஒரு தீங்கும் நடக்காமல் இருக்கும் அளவுக்கு நாம் அவர்களுடன் சிறப்பான முறையில் பழகுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

உறவினர்களுக்கு மார்க்க விஷயங்களை எத்தி வைத்தல்.

கிடைக்கும் நேரங்களில் நமது உறவினர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய செய்திகளை எத்தி வைப்பதற்கு முனைய வேண்டும். அது காலை நேரமாக இருக்களாம் அல்லது இரவுத் தொழுகைக்குப் பின் கண்டவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை விடுத்து அந் நேரத்தில் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு மார்க்கத்தின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை நன்மையான காரியங்களை நாம் சொல்லிக் கொடுக்கும் போது அவர்களும் அதன் படி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுத்த நன்மையை அடைந்து கொள்வோம்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீரலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-2)

நன்மையான காரியங்களில் அதிகமதிகம் ஈடுபடுபவர்களாக ரமழான் மாதத்தில் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரவில் நின்று வணங்குதல்.

ரமழான் மாதத்திற்கு என்று சிறப்பான எந்தத் தொழுகையும் இல்லாவிட்டாலும் மற்ற காலங்களில் தொழும் இரவுத் தொழுகையை விட ரமழான் மாத்த்தில் தொழும் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதை நாம் காணமுடிகிறது. எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழ வேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

யார் ரமளானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் தொழுகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.

இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டுகின்றன. நின்று வணங்குவது என்றால் நபியவர்கள் எவ்வாறு நின்று வணங்கினார்களோ அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபியவர்கள் பதினொரு ரக்அத்களே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நிறைய பிரார்த்தனைகளை செய்தல், பாவ மண்ணிப்புத் தேடுதல்.

நோன்பு பிடித்துக் கொண்டிருப்பவர் நிறைய பிரார்தனைகளை செய்ய வேண்டும். தனக்கு தேவையான கோரிக்கைகளை நோன்பாளியாக இருக்கும் நேரத்தில் இறைவனிடம் எடுத்து வைக்கும் போது அதற்கு இறைவன் நிறைய பலன்களைத் தருகிறான். மற்ற காலங்களில் நாம் நிறைய பாவங்கள் செய்திருப்போம் அந்தப் பாவங்களுக்குறிய பரிகாரமாக இந்த ரமழான் மாதத்தைப் பயன்படுத்தி இறைவனின் பாவ மன்னிப்பை கேட்க்க வேண்டும்.

இஃதிகாப் இருத்தல்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இதன் அடிப்படையில் நாமும் அந்த நாட்களில் இஃதிகாப் இருந்து நன்மைகளை அடைந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஒருவருக்காவது நோன்பு திறக்க உதவுதல்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு, நோன்பு திறப்பதற்கு வசதியில்லாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவருக்காவது நாம் நோன்பு நோற்பதற்கான அல்லது திறப்பதற்கான உதவிகளை செய்து கொடுக்கும் போது அவர்களின் மனது சந்தோஷத்தில் நிறைந்து விடுவதுடன், நாமும் சந்தோஷமாக இருந்து இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பித்ராக்களை சரியாக வழங்குதல்.

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503


ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

ஏழைகளுக்கான இந்த தர்மத்தை நாம் மனமுவந்து வழங்கும் போது நிறைய நன்மைகள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன.

நல்ல வார்த்தைகளை பேசுதல்.

நோன்பு காலம் என்பது பொருமையான மாதம் என்பதால் அம்மாதத்தில் நாம் நமது நாவைப் பேணுவதில் மற்ற மாதங்களைவிடவும் இம்மாதத்தில் மிகவும் அதிகமாக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

தீய வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள், கெட்ட எண்கங்களை உண்டாக்கும் பேச்சுகள், சினிமாப் பாடல்கள் போன்றவற்றை விட்டும் நாம் ஒதுங்கிவிட வேண்டும். அவ்வாறு ஒதுங்கும் போது, இதுவே நமது பயிற்சியாக உருவெடுத்து மற்ற மாதங்களிலும் நாம் சரியாக இருப்பதற்கு உதவியாகி விடுகிறது.

மார்க்கத்தைப் பற்றிய செய்திகளை தேடிப்படித்தல்.

நிறைய நேரம் கிடைக்கிறது என்ன செய்வதென்று தெரியவில்லை என ரமழான் காலத்தில் நிறையப் பேர் தவிப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் செய்வதற்கான ஒரு அருமையான காரியம் மார்க்த்தைப் பற்றிய புத்தகங்கள்ப் படிப்பது அல்லது எழுதுவதாகும்.

இது போன்ற வேலைகளை செய்யும் போது நம்மை அறியாமல் நிறைய விஷயங்களைப் படித்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும் அதனை சொல்லிக் கொடுக்க முடியும்.

பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல்.

ரமழான் மாதத்தைப் பொருத்தவரையில் நிறைய பயான் நிகழ்ச்சிகள் மார்க்கப் பிரச்சாரங்கள் செய்யப்படும் ஒரு மாதமாகும் இம்மாத்தில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நிகழ்த்தப்படும் பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது போன்ற செயல்பாடுகளில் அதிகமதிகம் நாம் ஈடுபடுவது நம்மை சிறப்பானவர்களாக மாற்றும் காரியமாகும்.

தாயின், மனைவியின் சமையலுக்கு உதவுதல்.

ரமழான் காலத்திலும் தாய், தந்தையர்களுக்கு உதவிகள் செய்து அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ள முனைய வேண்டும் அதிலும் குறிப்பாக தாயின் சமையலுக்கு, மனைவியின் சமையலுக்கெல்லாம் உதவுவதும் அதிகமாக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும்.

தந்தையின் வேலைகளுக்கு உதவுதல், தாயில் வேலைகளை இலகுவாக்குதல் போன்ற காரியங்களில் ரமழானில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும்.

குழந்தைகளுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள்.

குழந்தைகள் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான நேர அட்டவனை ஒன்றை தயார் செய்து குர்ஆன் ஒதல் பயிற்சி, இஸ்லாமிய பயான்கள் பார்க்க கேட்ட, குரான் கிராத்கள் கேட்பதற்கான பயிற்சிகள் என்பவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கும் போது அவர்கள் தமது ரமழான் காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.

தொலைக்காட்சியில் தீமையை நன்மையாக்குங்கள்.

ரமழான் காலத்தில் தொலைக்காட்சியில் நிறைய இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்பப்படும் அந்த நிகழ்ச்சிகளில் சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதுடன், பாவமான, கெட்ட நிகழ்ச்சிகளை விட்டும் நாமும் ஒதுங்கி நமது குழந்தைகளையும் காத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக.......................

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (4:1)

ரமழானில் இறைவன் காட்டிய அடிப்படையில் அதிகமான நன்மைகளை செய்து ரமழானை ஜெயித்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!