தொழுகை என்பது இறைவனுக்கும், அடியார்களுக்கும் இடையில் இருக்கும் ஒரு முக்கியமான
உரையாடல் நேரமாகும். இந்நேரத்தில் தொழுகையில் ஈடுபடும் தொழுகையாளிகள்
இமாமை பின்பற்றி அவருடைய கட்டளைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பது
இஸ்லாத்தின் உத்தரவாகும்.
ஆனால் இன்று தொழுகையில் ஈடுபடும்
பெரும்பாலான தொழுகையாளிகள் இந்த விஷயத்தில் கவணம் எடுக்காமல் செயல்படுவது
அவர்களை நரகத்தில் சேர்த்துவிடும் செயலாக மாறுகின்றது.
ஆம் தொழுவதின் மூலம் இறைவனிடம் பல
நன்மைகளைப் பெற வேண்டும், மறுமையில் சுவர்கம் நுழைய வேண்டும் என்றெல்லாம்
பலவாறு ஆசை வைக்கும் நம் சகோதரர்கள் தொழுகையில் இமாமை பின்பற்றும்
விஷயத்தில் கவணயீனமாக இருக்கிறார்கள்.
நபியின் எச்சரிக்கை.
தொழுகையில் இமாமைப் பின்தொடர்ந்து
தொழுபவர் இமாமுக்கு முன்பாக ருகூவு சுஜூது போன்ற காரியங்களை முந்திக்கொண்டு
செய்தால் நாளை மறுமையில் அல்லாஹ் அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாக
மாற்றி விடுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை
செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள் :உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை
உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை
அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை
அஞ்ச வேண்டாமா?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (691)
மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய
எண்ணத்தில் ஐந்து நேர தொழுகையிலும் தவராமல் கலந்து கொள்ளும் அன்பர்களே!
இந்த செய்தியை மனதில் பதிந்து கொள்ளுங்கள். ஏன் என்றால் நம்மில் பலர்
இப்படித் தான் தொழுகின்றோம்.
இமாமின் கட்டளைக்கு செவிமடுக்காமல்,
அவரைப் பின் தொடராமல் நாம் நமது இஷ்டத்திற்கு செயல்படுகின்றோம். அப்படி
செயல்படுவதினால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. மாறாக பாவத்தில்
வீழ்ந்து நாளை மறுமையில் கழுதைக்கு ஒப்பான உருவத்தில் நாம் எழுப்பப்
படுவோம் என்பதே மேற்கண்ட செய்தி விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கின்றது.
தொழுகையில் இமாமின் கட்டளைக்கு செவிசாய்த்து நாளை மறுமையில் வெற்றி பெறுவோமாக!
நன்றி rasmin misc
No comments:
Post a Comment