NASA successfully lands rover on Ma...
பாசதீனா, கலிபோர்னியா: மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் மற்றும் ஒன்று இன்று அரங்கேறியுள்ளது. பூமியில் அல்ல - நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில்.
அமெரிக்காவின் நாசா அனுப்பிய மார்ஸ் ரோவரான, மார்ஸ் கியூரியாசிட்டி விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் அழகாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. மனித குலத்தின் மிகப் பெரிய மைல் கல் சாதனையில் இதற்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
ஒரு டன் எடை கொண்ட இந்த கியூரியாசிட்டி விண்கலம்தான் இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப்பட்ட விண்கலங்களிலேயே பெரியதாகும்.
8 மாத கால பயணத்தை முடித்து இன்று பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆகியுள்ள இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு செவ்வாய் கிரகத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அனுப்பப்போகும் படங்களும், வீடியோக்களும், ஆய்வுத் தகவல்களும் மனித குலத்தை மாற்றிப் போடப் போகும் முக்கிய விஷயமாகும்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது, உயிர் வாழத்தகுதியானதாக அது இருக்கிறதா, உயிரினங்கள் ஏதேனும் அங்கு இருக்கின்றனவா என்பது குறித்த முக்கிய ஆய்வுக்கு இந்த கியூரியாசிட்டி உதவப் போகிறது.
இந்த விண்கலத்தில் 10 விதம் விதமான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவைதான் ஆய்வுக்குப் பயன்படப் போகின்றன. இதற்கு முன்பு அனுப்பப்பட்ட மார்ஸ் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி ஆகிய விண்கலங்களில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை விட இவை 15 மடங்கு அதிக எடை கொண்டவையாகும்.
மேலும் சில உபகரணங்கள் இதுவரை அனுப்பப்படாத புதிய சாதனங்கள். குறிப்பாக லேசர் பயரிங் சாதனம். இது பாறைப் பகுதியின் வேதித் தன்மையை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ஆராயும் வல்லமை படைத்ததாகும்.
மேலும் கியூரியாசிட்டியின் கைகள் போல செயல்படும் ரோபாட்டிக் இயந்திரங்கள் செவ்வாய் கிரகத்தின் தரை மற்றும் பாறைப் பகுதியில் துளையிட்டு ஆய்வு நடத்தக் கூடியவையாகும். மேலும் செவ்வாய் கிரக மண்ணை அள்ளி எடுத்து சோதனை செய்யவும் இது உதவும். இந்த சோதனைக்கான அத்தனை வசதிகளும் கியூரியாசிட்டியிலேயே உள்ளன. எனவேதான் இதை ஒரு குட்டி ஆய்வகமாக கூறுகிறோம். அதாவது இந்த விண்கலமே அத்தனை ஆய்வுகளையும் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
எனவே கியூரியாசிட்டியின் இந்த பயணம் மனித குலத்திற்கு மிக மிக முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. மேலும் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முயற்சிகளுக்கும் இந்த வி்ண்கலத்தின் பயணம் மிக மிக முக்கியமானது.
2030ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்களும், ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே கியூரியாசிட்டி தரப் போகும் தகவல்கள் மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
செவ்வாய் கிரக நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் அது கியூரியாசி்ட்டி தரையிறங்கியுள்ளது. கேல் கிரேட்டர் பகுதியில், ஒரு மலைக்கு அருகே இந்த விண்கலம் தற்போது இறங்கி நிற்கிறது.
இனிமேல்தான் தனது ஆய்வுகளை அது தொடங்கவுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா என்ற மிக முக்கியமான ஆய்வைத் தொடங்கப் போகும் கியூரியாசிட்டி மனித குலத்தை எந்த அளவுக்கு மாற்றி அமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தற்போது செவ்வாய் கிரகத்தில் இறங்கியபோது தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி. இது அந்த விண்கலத்தின் நிழல் அல்ல, மாறாக மனித குலத்தின் சாதனை நிழல் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நன்றி one india.com
No comments:
Post a Comment